முருகன் மாநாட்டால் அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை… எப்போதும் அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி குறித்தே பேச வேண்டுமா? எங்கள் கூட்டணி நன்றாக உள்ளது என பாஜக தேசிய மகளிரணித் தலைவியும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் காட்டத்துடன் கூறினார்.
நாட்டில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டதன் 50 ஆண்டு நிறைவு நாளையொட்டி கோவை, பீளமேட்டில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெருக்கடி நிலையில் பட்ட அனுபவங்களை மறந்து விட்டார். அதனால் தான் ஜனநாயகரீதியான எதிர்ப்புகளை கூட நெருக்கடிக்கு உள்ளாக்குகிறார். சவுக்கு சங்கர் மீதான வழக்குகள் அதற்கு உதாரணம். திருப்பூரில் ஒருவர் கொலை செய்யப்பட்டு உள்ளார். தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டை போய்க் கொண்டு இருக்கிறது.
தமிழகத்தில் நெருக்கடி நிலை உள்ளதோ ? என்று எண்ணத் தோன்றுகிறது. தனது அரசின் தோல்விகளை மறைக்கவே தி.மு.க மத்திய அரசை குறை கூறுகிறார்கள். தமிழகத்தில் பல இடங்களில் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. வகுப்பறைகள் வசதியில்லை. மாணவிகளுக்கு கழிப்பிடம் இல்லை. மத்திய அரசு அனைவரும் ஒரே மாதிரியான கல்வி அறிவு பெற வேண்டும் என விரும்புகிறது. காங்கிரஸ் ஆட்சி செய்த காலங்களில் கல்விக்கான அடிப்படை வசதியை அமைக்கவில்லை. இப்போது தான் வட மாநிலங்கள் உட்பட பல இடங்களில் அடிப்படை வசதி ஏற்பட்டு வருகிறது. தேசிய கல்விக் கொள்கையை அனைவரும் வரவேற்கிறார்கள். நாங்கள் யாருக்கும் பாகுபாடு காட்ட வில்லை. தமிழை அதிகமாக கற்றுக் கொடுக்கக் கூடிய சூழ்நிலையை திமுக அரசு ஏற்படுத்த வேண்டும்.
முருகன் மாநாட்டால் அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை. எப்போதும் அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி குறித்தே பேச வேண்டுமா. எங்கள் கூட்டணி நன்றாக உள்ளது. தி.மு.க ஆட்சி அகற்றப்படுவது உறுதி. கூட்டணி ஆட்சி குறித்து அமித்ஷா தெளிவாக பேசி விட்டார். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அ.தி.மு.க தான் தலைமை தாங்குகிறது. தமிழ்நாட்டில் போதைப்பொருள் இளைஞர்கள் மத்தியில் எளிதில் புழங்குகிறது. இதை முற்றிலும் ஒழிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.