இந்த வாரம் ஓடிடியில் பல்வேறு திரைப்படங்கள் வெளியாக உள்ளன. என்னென்ன படங்கள் வெளியாகின்றன? மற்றும் இந்தப் படங்களை எந்தெந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம்? என்பது பற்றி இந்த பதிவில் தற்போது பார்க்கலாம்.
உலக அளவில் அதிக ரசிகர்களைக் கொண்ட ஸ்ட்ரேஞ்சர்ஸ் திங்க்ஸ் (Strangers Things) இணையத் தொடரின் 5ஆவது சீசனின் 2-ஆம் பாகம் நெட்ஃபிளிக்ஸில் இன்று வெளியாகிறது. இந்தத் தொடரை தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் காணலாம்.
இதே போன்று, நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரிவால்வர் ரீட்டா திரைப்படம் நெட்ஃபிளிக்ஸில் இன்று வெளியாகிறது. இந்தப் படம் கடந்த மாதம் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி சுமாரான வரவேற்பைப் பெற்றது. முன்னணி கேரக்டர்களில் கீர்த்தி சுரேஷ், ராதிகா, சூப்பர் சுப்பராயன் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். பயந்த சுபாவம் கொண்ட கீர்த்தியின் வீட்டிற்கு போதையில் தாதா சூப்பர் சுப்பராயன் வந்து விடுகிறார். எதிர்பாராத விதமாக அவர் உயிரிழந்த பின் நடக்கும் திருப்பங்கள்தான் இந்த ரிவால்வர் ரீட்டா படத்தின் கதை ஆகும்.
அதேபோல், மொட்டை ராஜேந்திரன், முனிஷ்காந்த் நடித்துள்ள ஹாரர் காமெடி படமான ரஜினி கேங், அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகிறது.
நடிகர் முனிஷ்காந்த் நாயகனாக நடித்துள்ள “மிடில் கிளாஸ்” திரைப்படம், ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. மேலும், இந்தப் படத்தில் விஜயலட்சுமி, ராதாரவி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு மக்கள் நல்ல வரவேற்பை அளித்து வருகின்றனர்.
இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மம்மூட்டி நடித்த மலையாள திரைப்படம் தான் ‘டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்’. இந்தப் படத்தில் கோகுல் சுரேஷ், சுஷ்மிதா பட், விஜய் பாபு, சித்திக் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இறுதியாக இந்தப் படம் தற்போது ஜீ5 ஓடிடியில் வெளியாகியுள்ளது. தமிழ் மொழியிலும் இந்த படம் காணக் கிடைக்கிறது.
நிவின் பாலியின் முதல் வெப் சீரிஸாக உருவாகியுள்ளது ‘பார்மா’. இதில் நரேன், ரஜித் கபூர், ஸ்ருதி ராமச்சந்திரன் மற்றும் வீணா நந்தகுமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்நிலையில் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ‘பார்மா’ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
