சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரிஷிகேஷ் ஆசிரமத்தில் இருந்து பத்ரிநாத் செல்லும் வழியில், சாலையில் உணவு அருந்தும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நாகார்ஜூனா, ஆமிர் கான், உபேந்திரா உள்ளிட்டோர் இணைந்து நடித்து சமீபத்தில் வெளியான, ‘கூலி’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதற்கு அடுத்ததாக நெல்சன் இயக்கத்தில், ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கேரளத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து, உலக நாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க உள்ளதாகவும், இருவரும் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், இயக்குநர் இன்னும் தேர்வு செய்யப்படாமல் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதற்கிடையில், நடிகர் ரஜினிகாந்த் தான் நடித்த படம் வெளியாகும் முன்பு இமயமலைக்கு ஆன்மீக யாத்திரை மேற்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில், படப்பிடிப்பு ஓய்வில் ஒருவார ஆன்மீகப் பயணமாக ரஜினிகாந்த் இமயமலைக்குச் சென்றுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் இன்று பத்ரிநாத் செல்கிறார்.

இதனை தொடர்ந்து பத்ரிநாத்திலிருந்து பாபா குகைக்கு செல்லவுள்ள ரஜினிகாந்த் ஒரு வாரம் அங்கு தங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இமயமலை பயணம் மேற்கொண்டுள்ள ரஜினிகாந்த் ரிஷிகேஷ் ஆசிரமத்தில் இருந்து பத்ரிநாத் செல்லும் வழியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

Share.
Leave A Reply

Exit mobile version