போதைப்பொருள் வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் தினேஷ் ராஜை திருமங்கலம் போலீசார் கைது செய்துள்ளனர். இவ்வழக்கில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள இணை தயாரிப்பாளர் சர்புதீன் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சென்னை அண்ணா நகர் பார்க் ரோடு அருகே போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில், கடந்த நவம்பர் 19-ஆம் தேதி போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அங்கு போதைப்பொருள் வைத்திருந்த தியானேஷ்வரன் என்பவரை கைது செய்த திருமங்கலம் போலீசார், அவரிடமிருந்த 4 LSD ஸ்டாம்ப் வகை போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், தேனாம்பேட்டையைச் சேர்ந்த நடிகர் சிம்புவின் ’ஈஸ்வரன்’ பட இணை தயாரிப்பாளர் சர்புதீன் (44), முகப்பேரைச் சேர்ந்த சீனிவாசன், வளசரவாக்கத்தைச் சேர்ந்த சரத் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் சர்புதீன் பயன்படுத்திய காரில் இருந்து ரூ.27.91 லட்சம் மற்றும் சீனிவாசன் வீட்டில் இருந்து 10 கிராம் ஓஜி கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இதனையடுத்து, பட இணை தயாரிப்பாளர் சர்புதீனிடம் நடத்திய தீவிர விசாரணையில், சினிமா பிரபலங்களுக்கு தனியார் விடுதி மற்றும் அவரது வீட்டில் பார்ட்டி வைத்தது தெரியவந்தது. இதனையடுத்து பார்ட்டியில் பங்கேற்ற சினிமா பிரபலங்களின் பட்டியலை வைத்து விசாரணை நடத்தப்பட்டது. இதில் சினிமா தயாரிப்பாளர் தினேஷ் ராஜ் பார்ட்டியில் போதைப்பொருளை பயன்படுத்தியது தெரியவந்தது. இதன் அடிப்படையில், சினிமா தயாரிப்பாளரான நுங்கம்பாக்கத்தை சேர்ந்த தினேஷ் ராஜ் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து, போதைப்பொருள் வழக்கில் மேலும் பல சினிமா பிரபலங்கள் சிக்குவதற்கு வாய்ப்புள்ளதாக போலீசார் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தயாரிப்பாளர் தினேஷ் ராஜ் தற்போது “லவ் லவ் ” என்கிற திரைப்படத்தை தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் பின்னர் ஜாமீனில் வெளிவந்தனர். இந்த நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித் துறை அலுவலகத்தில் ஸ்ரீகாந்த் கடந்த மாதம் 11-ம் தேதி (நவ.11) ஆஜரானார். அப்போது, கடந்த ஓராண்டில் நடத்தப்பட்ட வங்கி பரிவர்த்தனைகள், வருமான வரி தாக்கல் செய்த ஆவணங்கள் உள்ளிட்டவற்றை பெற்று அமலாக்கத் துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version