தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குநருமான கே. ராஜன் சென்னை அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், ஆற்றில் இருந்து அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இவருடைய இந்த விபரீத முடிவு குறித்து அடையாறு காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இவரது தற்கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

தமிழ் திரையுலகில் பல தசாப்தங்களாக இயங்கி வந்த கே. ராஜன், தயாரிப்பாளர், இயக்குநர், எழுத்தாளர் மற்றும் நடிகர் என பன்முகத்திறமை கொண்டவர். கடந்த 1983-ஆம் ஆண்டு சுரேஷ் நடிப்பில் வெளியான ‘பிரம்மச்சாரிகள்’ திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் கால் பதித்தார்.

1991-ல் சரத்குமார், நிழல்கள் ரவி நடிப்பில் வெளியான ‘நம்ம ஊரு மாரியம்மா’ என்ற திரைப்படத்தை இயக்கினார். அதுமட்டுமின்றி, ‘தங்கமான தங்கச்சி’, ‘சின்ன பூவை கிள்ளாதே’ போன்ற படங்களுக்கு கதையும் எழுதியுள்ளார்.

‘உளவாளி’, ‘கபடி கபடி’, ‘பாம்பு சட்டை’ மற்றும் சமீபத்தில் வெளியான அஜித்தின் ‘துணிவு’, ‘பகாசூரன்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

இதுமட்டுமல்லாமல், தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர் கே. ராஜன் என்றாலே நினைவுக்கு வருவது அவரது அதிரடியான மேடைப் பேச்சுதான். குறிப்பாக சினிமா ஆடியோ வெளியீட்டு விழாக்கள் மற்றும் திரைப்பட நிகழ்ச்சிகளில் இவர் பேசினாலே அங்கு ஏகப்பட்ட சர்ச்சைகள் கிளம்பும்.

சினிமாவில் பெரிய ஹீரோக்கள் வாங்கும் கோடிக்கணக்கான சம்பளத்தினால் சிறு தயாரிப்பாளர்கள் எப்படியெல்லாம் கஷ்டப்படுகிறார்கள், நஷ்டமடைகிறார்கள் என்பதை எதற்கும் அஞ்சாமல் பொது மேடைகளில் ஓப்பனாகப் பேசி விவாதிக்கக்கூடியவர் கே. ராஜன். தயாரிப்பாளர்களின் உரிமைகளுக்காகவும், அவர்களின் நல்வாழ்வுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்த ஒரு மூத்த கலைஞர், இப்படி ஆற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் ஒட்டுமொத்த சினிமா உலகினரையும், ரசிகர்களையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version