தமிழ் சினிமாவின் இரு பெரும் துருவங்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், உலக நாயகன் கமல்ஹாசனும் சுமார் 46 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையில் இணையவுள்ளனர். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்தப் புதிய படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் தயாரிக்கிறது. கடந்த பிப்ரவரி 21 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட இந்தப் படத்தின் புரோமோ வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் இணைவதால், இந்தத் திரைப்படம் கோலிவுட்டின் மிகப்பெரிய ‘மெகா பட்ஜெட்’ படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டணிக்கு வழங்கப்படவுள்ள சம்பளம் குறித்துப் பல்வேறு தகவல்கள் கசிந்துள்ளன. குறிப்பாக, இந்தப் படத்திற்காக ரஜினிகாந்துக்கு சுமார் ரூ.225 கோடி சம்பளமாகப் பேசப்பட்டதாக கூறப்பட்டது. அதாவது சமீபத்தில் வெளியான ‘ஜனநாயகன்’ படத்திற்காக நடிகர் விஜய் ரூ.210 – ரூ.220 கோடி வரை சம்பளம் பெற்றதால் இதற்கு இணையாக இருக்கவேண்டும் என்ற நோக்கில் சம்பளம் பேசப்பட்டதாக தெரிகிறது
மறுபுறம், கமல்ஹாசன் இந்தப் படத்தின் முக்கிய அங்கமாக இருப்பதோடு, அவரது ‘ராஜ்கமல் பிலிம்ஸ்’ நிறுவனமும் தயாரிப்பில் பங்குபெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் ரஜினி -கமல் இருவருக்கும் சமமான முக்கியத்துவம் கொண்ட கதாபாத்திரம் என்பதால் இருவருக்கும் தலா ரூ.150 கோடி வரை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டிருக்கலாம் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அனிருத் இசையமைக்கவுள்ள இந்தத் திரைப்படம், ஒரு ‘காமெடி த்ரில்லர்’ பாணியில் இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
