திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து கஞ்சா சாக்லேட் விற்பனையில் ஈடுபட்ட வடமாநில இளைஞர்கள் மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் வடக்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட கல்லம்பாளையம் பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், அந்த பகுதியில் திருப்பூர் வடக்கு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். வட மாநில தொழிலாளர்கள் தங்கி இருக்கும் குடியிருப்பு பகுதியில் சோதனை செய்த போது குறிப்பிட்ட ஒரு அறை மூடி வைக்கப்பட்டிருந்தது. அதனை திறந்து பார்த்தபோது அதில் மூட்டை மூட்டையாக 30 கிலோ கஞ்சா சாக்லேட் விற்பனைக்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
உடனடியாக கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் அந்த அறையில் தங்கி இருந்த 3 வட மாநில இளைஞர்களையும் பிடித்து விசாரணை செய்தனர். அதில் அவர்கள் உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஆகாஷ் சவுத்ரி (21), முகேஷ் (22), முனிக்கண் (48) என்பது தெரியவந்தது.
இவர்கள் கஞ்சா சாக்லேட்டுகளை எங்கிருந்து பெற்றார்கள், எப்படி கடத்தி வந்தார்கள் உள்ளிட்ட விவரங்களை போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
