சினிமா உலகில் நீண்ட நாள் திருமண உறவில் இருந்த பிரபலங்கள் விவாகரத்து பெறுவது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாகி வருகிறது. தனுஷ்-ஐஸ்வர்யா தொடங்கி, ஜி.வி.பிரகாஷ், ஏ.ஆர்.ரகுமான் வழியே ரவி மோகன் – ஆர்த்தி தம்பதி பிரிவு வரை அடுத்தடுத்து பிரபலங்கள் விவாகரத்து செய்வது அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்துகிறது. ஜெயம் படம் மூலம் தனது சினிமா வாழ்க்கையை தொடர்ந்த ரவி மோகன், 40-க்கும் மேற்பட்ட படங்களில் இதுவரை நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான காதலிக்க நேரமில்லை திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.
தனி ஒருவன், கோமாளி போன்ற வெற்றிப் படங்களை எப்போது இவர் தருவார் என ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்க, வெளியானது என்னவோ மனைவியை பிரிவதாக அவர் வெளியிட்ட விவாகரத்து அறிக்கை தான். 2009-ம் ஆண்டு தயாரிப்பாளர் சுஜாதா விஜயக்குமாரின் மகளான ஆர்த்தி என்பவரை ரவி மோகன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ள நிலையில், குடும்பமாக இவர்கள் வெளியிடும் புகைப்படங்களும், வீடியோக்களும் பொறாமைக் கொள்ளும் படியாக இருந்து வந்தது. தாய், தந்தை, மனைவி என மூவருடனும் இவர் அளித்திருந்த பேட்டி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தும் இருந்தது.
அப்படி இருக்க, கடந்த 2024-ம் ஆண்டு இருவரும் பிரிந்து விட்டதாக செய்திகள் பரவியது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக இந்தாண்டு தொடக்கத்தில் ரவி மோகன் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு இருந்தார். அதில் மனைவி ஆர்த்தி தன்னை கீழ் தரமாக நடத்துவதாகவும், மரியாதையை இழந்து வாழ்ந்து வருவதுமாக அவர் கூறியிருந்தது அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருந்தது. இது குறித்து ஆர்த்தியும் வாய் திறக்காமல் இருந்ததோடு, ரவிமோகனோடு சேர்ந்து தான் வாழ போராடுவதாகவும் தெரிவித்திருந்தார். இவர்களது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், COUPLE GOALS என்பது போல் ஒரே மாதிரியான கலரில் உடையணித்து பாடகி மற்றும் மருத்துவர் ஒருவருடன் ரவி மோகன் திருமண நிகழ்வில் கலந்து கொண்டது தான் இப்போதைய ஹாட் டாப்பிக்..
தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமண விழாவில், ரவி மோகன் பாடகி கெனிஷா ஃபிராஸிஸோடு ஒன்றாக கலந்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. ஏற்கனவே இவர்களுக்குள் அது இருக்குமோ, இது இருக்குமோ என கிசுகிசுக்கள் உலா வந்த போது, தாங்கள் நண்பர்கள் மட்டுமே என கூறியிருந்தார் ரவி மோகன். அப்படி இருக்க, சரி நண்பர்களாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பார்கள் என ஆறுதல் அடைவதற்குள், ஆர்த்தியின் அறிக்கை வெளியாகி அக்னி புயலை கிளப்பி இருக்கிறது.
அந்த அறிக்கையில், இன்று புதிதாக முளைத்தவர்களுடன் புதியதொரு உறவை உருவாக்கி கொண்டதால், அவருக்கு பழைய உறவு வெறும் செங்கல் சுவர் போல் காட்சியளிப்பதாகவும், எனது குழந்தைகளுக்கு கொடுத்த வாக்குறுதியை அவர் பறக்க விட்டு விட்டதாகவும் கூறியிருக்கிறார். எடுக்கப்படாத தொலைப்பேசி அழைப்புகள், நிராகரிக்கப்பட்ட சந்திப்புகள், போலி சமாதான வாக்குறுதிகள் போன்ற அனைத்தும் தங்கள் நெஞ்சில் காயமாக இருப்பதாகவும், இன்று எங்கள் வாழ்க்கையில் குறுக்கே வந்தவர்களால் என் குழந்தைகளின் உடல், மன ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.