தமிழ் சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் நடிகர் சூரி. ’வெண்ணிலா கபடிக் குழு’ படத்தில் பரோட்டா சாப்பிடும் காமெடியில் நடித்து பிரபலமடைந்ததால் பரோட்டா சூரி என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டார். தொடர்ந்து ஒரு சில வருடங்களில் அனைத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நகைச்சுவையில் தனக்கென தனி இடத்தைப் பிடித்தார்.
பின்பு யாரும் எதிர்பாரா வண்ணம் விடுதலை படத்தில் ஹிரோவாக அறிமுகமானார் நடிகர் சூரி. விடுதலை பாகம் ஒன்று மற்றும் இரண்டாம் பாகத்தில் இவரது நடிப்பு மிகவும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து ’கொட்டுக் காளி, கருடன்’ போன்ற படங்களிலும் ஹீரோவாக கலக்கினார். அதன்பின் ’விலங்கு’ வெப் தொடரை இயக்கி புகழ்பெற்ற இயக்குநர் பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் ’மாமன்’ படத்தில் இணைந்தார் சூரி. ராஜ்கிரண், ஐஸ்வர்யா லட்சுமி உட்பட பலர் நடிப்பில் குடும்ப உறவுகளின் மதிப்பை உணர்த்தும் விதமாக உருவான இப்படம் இன்று (16.05.2025)வெளியானது.
இப்படம் வெற்றி படமாக வேண்டி மதுரையில் உள்ள திருப்பரங்குன்றத்தில் சூரியின் ரசிகர்கள் மண் சோறு சாப்பிட்டு வேண்டுதல் மேற்கொண்டனர். சூரியின் பெயரில் சிறப்பு அர்ச்சனையும் நடத்தினர். “மாமன் படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். ரசிகர்கள் இந்த படத்தை தியேட்டரில் கொண்டாட வேண்டும் என்ற வேண்டுதலுக்காக இந்த செயலை செய்ததாகவும், இனி வரும் சூரியின் அனைத்து படங்களுக்கும் இதுபோன்று வேண்டுதல் செய்ய உள்ளதாகவும் அவரது ரசிகர்கள் கூறினர்.
இந்த நிலையில் சென்னை கமலா திரையரங்கில் ரசிகர்களுடன் தனது படத்தை பார்த்து ரசித்த நடிகர் சூரி, பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”மதுரையில் மண் சோறு சாப்பிட்டவர்களை தம்பிகள் என்று சொல்வதற்கே எனக்கு வெட்கமாக உள்ளது.தம்பிகளா, இது ரொம்ப முட்டாள்தனமானது. படம் நன்றாக இருந்தால், கதை நன்றாக இருந்தால் அந்த படம் ஓடும். அதை விட்டு விட்டு மண்சோறு சாப்பிட்டால் படம் எப்படி எடுத்தாலும் ஓடி விடுமா என்ன? மிகவும் வேதனையாக இருக்கிறது. அந்த பணத்திற்கு 4 பேருக்கு தண்ணீர், மோர், உணவு வாங்கி கொடுத்திருக்கலாம். இது போன்ற செயலை செய்பவர்கள் எனது ரசிகர்களாக இருக்கக் கூட தகுதியற்றவர்கள்” என கூறியுள்ளார்.
