திரைப்பட எடிட்டர் மோகனுக்கு இரண்டு மகன்கள். அவரின் இரண்டாவது மகன் ரவி மோகன். மூத்த மகன் இயக்குநர் மோகன் ராஜா. மோகன் ரவி என்ற இயற்பெயர் கொண்டவர், லயோலா கல்லூரியில் விஸ்காம் முடித்து விட்டு சிறிது நாட்கள், இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவிடம் உதவியாளராக பயிற்சி எடுத்துக் கொண்டார். தனது தந்தையின் தயாரிப்பில் 2003-ம் ஆண்டு ஜூன் மாதம் 21-ம் தேதி வெளியான ”ஜெயம்” என்ற படத்தின் மூலம் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமானார் ரவி. அவரது அண்ணனான மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான இந்தப் படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து சினிமா உலகில் ஜெயம் ரவி என புதிய பெயரோடு வலம் வரத் தொடங்கினார்.
இரண்டாவாதாக அசின், நதியா உடன் இணைந்து ரவி நடித்து ”சன் ஆஃப் மகாலட்சுமி” திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதுவும் அவரது அண்ணன் மோகன் ராஜா இயக்கியது தான். வெங்கட்பிரபு எப்படி தனது தம்பி பிரேம் ஜி-யை அனைத்து படங்களிலும் நடிக்க வைத்து விடுவாரோ, அதேப் போல ஆரம்ப காலகட்டத்தில் அண்ணன் இயக்கிய படங்களில் நிச்சயம் ரவி இருப்பார். இரண்டு படங்களை தொடர்ந்து ’தாஸ்’, ’மழை’, ’இதயத் திருடன்’ உள்ளிட்ட படங்கள் அவருக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இதில் சுவாரசியம் என்னவென்றால், இந்த 3 படங்களும் வெளி இயக்குநர்கள் எடுத்த படங்கள்.
அதனை சரிகட்டும் விதமாக தம்பியை தோல்வியில் இருந்து மீண்டு எடுக்க மோகன்ராஜா மீண்டும் ரவியை வைத்து ”உனக்கும்-எனக்கும்” என்ற படத்தை இயக்கினார். 2006-ம் ஆண்டு வெளியான படங்களில் அதிக வசூலைக் குவித்த படமாக இந்தப் படம் அமைந்தது. தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியான ’தீபாவளி’, ’சந்தோஷ் சுப்ரமணியம்’, ’தாம் தூம்’, ’பேராண்மை’, ’தில்லாலங்கடி’, ’எங்கேயும் காதல்’, ’ஆதி பகவன்’, ’பூலோகம்’, ‘நிமிர்ந்து நில்’, என ஒருசில ஹிட் படங்கள், ஒரு சில ஃபிளாப் படங்கள் என மாறி மாறி கொடுத்து திரையுலகில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை பிடித்துக் கொண்டார் ரவி.
இதற்கிடையில் 2009-ம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார் ரவி. பிரபல டிவி தயாரிப்பாளர் சுஜாதா மற்றும் தொழிலதிபர் விஜயகுமார் தம்பதியின் மூத்த மகள் ஆர்த்தி. ஸ்காட்லாந்தில் முதல்முறையாக பழக ஆரம்பித்த இருவரும் பின்பு காதலில் விழ, இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. ஆர்த்தி சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். இவரது ஃபோட்டோ ஷூட்க்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. ஆர்த்தி-ஜெயம்ரவி தம்பதிக்கு அயன் மற்றும் ஆரவ் என இரண்டு மகன்கள் உள்ளனர்.
இதில் ஆரவ் அப்பாவுடன் இணைந்து ’டிக்டிக்டிக்’ படத்தில் நடித்திருந்தார். ஒரிஜினல் அப்பாவும்-மகனும் ’குறும்பா’ பாடலில் அசத்தியிருப்பார்கள். தொடர்ந்து ’ரோமியோ ஜூலியட்’, ’கோமாளி’, ’மிருதன்’, ‘தனிஒருவன்’, ’வனமகன்’, ’பொன்னியின் செல்வன்’, ’அகிலன்’, ‘இறைவன்’, ’சைரன்’,’பிரதர்’, ’காதலிக்க நேரமில்லை’, என 20 வருடங்களில் 29 படங்களில் நடித்துள்ளார் ரவி. அத்தோடு தன்னை இனி ஜெயம் ரவி என அழைக்க வேண்டாம் எனவும், ரவி மோகன் என அழைக்குமாறும் கோரிக்கை விடுத்திருந்தார். இப்படி திரையுலகில் அவரது கிராஃப் ஏற்ற இறக்கமாக சென்று கொண்டிருக்க, அம்மா-அப்பா-மனைவி என மூவருடன் சேர்ந்து தனியார் யூடியூப் சேனலில் கொடுத்த நேர்காணல், ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டது.
வாழ்ந்தால் இப்படி வாழனும் என அனைவரையும் பொறாமைப்பட வைத்தது. அப்படி அனைவரது கண்ணும் பட்டதாலோ என்னவோ, இருவரும் பிரிய இருப்பதாக கடந்தாண்டு முதல் கிசுகிசுக்கள் எழுந்தன. சரி எப்போதும் போல இதுவும் வதந்தியாக இருக்கக் கூடும் என கடந்து போக நினைக்கும் போது, ஆர்த்தி தனது சமூக வலைதளங்களில் இருந்து ரவிவுடன் இருந்த புகைப்படங்களை நீக்கினார். இதனால் இந்த கிசுகிசு மீண்டும் வேகமெடுக்க ஆரம்பித்தது. கடந்தாண்டு செப்டம்பர் மாதம் ஆம் நாங்கள் பிரியத் தான் போகிறோம் என அறிக்கை மூலம் ஊர்ஜீதப்படுத்தினார் ரவி.
நீண்டகால யோசனை மற்றும் பரிசீலனைக்கு பிறகு ஆர்த்தி உடனான தனது திருமண வாழ்க்கையிலிருந்து விலகும் கடினமான முடிவை எடுத்துள்ளதாக தனது சமூக வலைதளங்களில் அறிக்கை மூலம் தெரியப்படுத்தினார் ரவி. இவர்களது பிரிவுக்கு பல்வேறு காரணங்கள் வெளிவட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது. அதாவது ஆர்த்தி ரவியை மரியாதை இல்லாமல் நடத்தியது, தனிப்பட்ட முறையில் ரவியை இயங்க விடாததே இதற்கு காரணம் என கூறப்பட்டது. இன்னொரு பக்கம் ரவி பாடகி கெனிஷாவுடன் ஊர் ஊராக சுற்றி வந்தது தான் இதற்கு காரணம் எனவும் கூறப்பட்டது.
ஆனால் ஆர்த்தியோ, இந்த விவாகரத்து செய்தி குறித்து தனக்கு தெரியாது எனவும், சேர்ந்து வாழவே விரும்புவதாகவும் அவர் கூறியிருந்தார். இது இப்படியே தொடர்ந்து கொண்டிருக்க, கெனிஷாவுடன் ஒரே மாதிரியான கலரில் உடையணிந்து ஜோடியாக தயாரிப்பாளர் ஐசரி கணேசன் மகள் திருமண நிகழ்ச்சியில் ரவியும்-கெனிஷாவும் கலந்து கொண்டது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அன்றே இரண்டு பக்கத்திற்கு நீண்ட அறிக்கையை ஆர்த்தி வெளியிட்டு இருந்தார். அதில் முழுக்க முழுக்க ரவி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். புதிதாக வந்தவர்களுக்காக குடும்பத்தை அவர் பிரிந்து விட்டதாகவும் கூறியிருந்தார்.
இதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக ஜெயம் ரவியும் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார். இந்த விவகாரம் தொடர்பான தனது கடைசி அறிக்கை எனவும் குறிப்பிட்டிருந்தார். ஆர்த்திக்கு எதிரான பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்தார். கடந்த சில ஆண்டுகளாக மிகவும் கட்டுப்படுத்தப்பட்டதாகவும், பெற்றோருக்கு கூட பணம் அனுப்ப முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டதாகவும், தன் மீது கடன் சுமையை வைத்ததாகவும் தெரிவித்திருந்தார். மேலும் கெனிஷா தனது அழகான துணை எனவும், புகழாரம் சூட்டியிருந்தார். இதன் மூலம் அவர் எதிர்காலத்தில் கெனிஷாவை திருமணம் செய்து கொள்ள வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
இப்படி இவரது திருமண வாழ்க்கை சந்திசிரித்துக் கொண்டிருக்க, இவற்றை எல்லாம் மீறி திரையுலகில் ரவி மோகன் நிலைத்து நீடித்து நிற்பரா? என்பதை பொருத்திருந்து பார்ப்போம்…
