விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை சன் டிவி 55 கோடி ரூபாய் கொடுத்து பெற்றுள்ளது.
அரசியல்ரீதியாக திமுகவும், தவெகவும் நேரெதிர் நிலையில் நிற்கின்றன. தனது அரசியல் எதிரி திமுக தான் என்று நடிகரும், தவெக தலைவருமான விஜய் வெளிப்படையாகவே அறிவித்து வருகிறார். அதேசமயம் திமுகவின் நிதியாதாரத்தில் ஆரம்பிக்கப்பட்ட சன் டிவி, பல நேரங்களில் திமுக எடுக்கும் அரசியல் நிலைப்பாடுகளுக்கு நேரெதிராகவே செயல்படுவது வழக்கம்.
தேர்தல் நேரங்களில் திமுக தலைவர்களின் செய்திகள் அதிகப்படியான அளவு சன் டிவியில் ஒளிபரப்பாவதை மறுக்க முடியாது. ஆனால் வணிகரீதியாக, திமுக எடுக்கும் முடிவுகளுக்கு எதிராக அவ்வப்போது தனித்து செயல்படுவது சன் டிவியின் பழக்கம்.
அந்த பழக்கம், இதோ நடிகர் விஜயின் ஜனநாயகன் வரை தொடர்கிறது. 2026 தேர்தலுக்கான ஆயுதமாக தனது ஜனநாயகன் படத்தை நினைக்கிறார் விஜய். ஆனால் அதே படத்தை 55 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது சன் டிவி. போட்ட பணத்தை எடுப்பதற்கு ஜனநாயகன் படத்தை அதிகமுறை தனது தொலைக்காட்சிகளில் சன் டிவி இடம்பெற்றாக செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் அது ஒருவேளை திமுகவுக்கு எதிராக கூட போய் முடியலாம். ஒருவேளை படத்தை வாங்கி தேர்தல் முடியும் வரை பெட்டிக்குள் வைத்து மூடிக் கொண்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
ஹெச் வினோத் இயக்கத்தில் அனிருத் இசையில், தனது கடைசி திரைப்படம் என்ற அறிவிப்போடு ஜனநாயகன் வருவது நடிகர் விஜயின் திரைப்பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல். அதனை சன் டிவி எவ்வாறு அணுகும் என்பது போகப்போகத் தான் தெரியவரும். ஜனவரி மாதம் பொங்கலுக்கு விஜய்யின் ஜனநாயகன் திரைக்கு வரவுள்ளது.
இந்த படத்தின் முன்னோட்ட போஸ்டரில் கையில் சவுக்குடன், நான் ஆணையிட்டால் என்ற வாசகத்தோடு ஏறத்தாழ எம்ஜிஆர் பாணியில் விஜய் நிற்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. முழுக்க, முழுக்க தனது அரசியல் கருத்துகளை எடுத்துரைக்கவே ஜனநாயகன் படத்தை விஜய் தேர்ந்தெடுத்துள்ளார் என்பது எல்லோருக்குமே தெரியும். பார்ப்போம் என்ன நடக்கிறது என்று..