ஆஸ்கர் விருது பெற்ற ஹாலிவுட்டின் முன்னணி இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் மற்றும் ‘ஸ்பைடர்மேன்’ நடிகர் டாம் ஹாலண்ட் ஆகியோர் தங்களது அடுத்த பிரம்மாண்ட படைப்பான ‘தி ஒடிஸி’ திரைப்படத்தின் இந்திய பிரீமியர் காட்சிக்காக இன்று (ஜூலை 10) மும்பை வந்தடைந்தனர்.
கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய திரைப்படம் ஒன்றுக்கு இந்தியாவில் அதிகாரப்பூர்வமாகப் சிறப்புக் காட்சி விழா நடத்தப்படுவது இதுவே முதல்முறையாகும். யுனிவர்சல் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தத் திரைப்படத்தின் உலகளாவிய விளம்பரப் பயணத்தில் லண்டன், பாரிஸ் மற்றும் நியூயார்க் நகரங்களுடன் சேர்த்து இந்தியத் தலைநகரான மும்பையையும் ஒரு முக்கிய மையமாகத் தேர்ந்தெடுத்துள்ளது.
இதற்காகத் தனது தயாரிப்பாளரும் மனைவியுமான எம்மா தாமஸ், படத்தின் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள மேட் டாமன் மற்றும் டாம் ஹாலண்ட் ஆகியோருடன் நோலன் மும்பை வந்துள்ளார். அவர்கள் அனைவரும் மும்பையின் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘தாஜ் மஹால் பேலஸ்’ ஹோட்டலில் தங்கியுள்ளனர்.
மும்பையில் நடைபெற்ற ஊடகங்களுக்கான பிரத்யேகக் காட்சிக்குப் பிறகு ரசிகர்களைச் சந்தித்த நடிகர் டாம் ஹாலண்ட், திரையரங்கில் இந்திய ரசிகர்கள் எழுப்பிய உற்சாக ஒலியைக் கண்டு நெகிழ்ந்தார். தங்களை இவ்வளவு அன்போடும், மகிழ்ச்சியோடும் வரவேற்ற இந்திய மக்களுக்கு மனமார்ந்த நன்றிகள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். உலகிலேயே இந்திய ரசிகர்களைப் போலத் திரையரங்குகளில் யாரும் இவ்வளவு எனர்ஜியைக் கொண்டு வருவதில்லை என்று தெரிவித்த ஹாலண்ட், கிறிஸ்டோபர் நோலனின் இந்த அற்புதம் நிச்சயம் பிடிக்கும் என்றார். உலகிலேயே சினிமா குறித்து அதிகம் தெரிந்த, சினிமாவைத் தீவிரமாகக் காதலிக்கும் ரசிகர்கள் இந்திய ரசிகர்கள் தான் எனப் நோலன் பாராட்டினார்.
ஹாலிவுட் வரலாற்றிலேயே முழுக்க முழுக்க ஐமேக்ஸ் கேமராக்கள் மூலம் மட்டுமே எடுக்கப்பட்ட முதல் திரைப்படம் என்ற பெருமையை ‘தி ஒடிஸி’ பெற்றுள்ளது. ஹோமரின் புகழ்பெற்ற கிரேக்கக் காவியமான ‘ஒடிஸியஸ்’ கதையை மையமாகக் கொண்டு, ட்ராய் போருக்குப் பின் ஒடிஸியஸ் தனது தாயகம் திரும்ப மேற்கொள்ளும் 10 ஆண்டுக்காலப் போராட்டப் பயணத்தை நோலன் பாணியில் ஆக்ஷன் டிராமாவாக மாற்றியுள்ளனர்.
ஜூலை 17-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள இத்திரைப்படத்திற்கு இந்தியாவில் இப்போதே முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

