தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான இரா. செழியன் இன்று காலை உயிரிழந்தார். வயது முதிர்வு மற்றும் உடல் நலக் குறைவு காரணமாக தரமணியில் உள்ள ஒரு தனியார் கேன்சர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை காலமானார். அவரது மறைவு திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட செழியன், புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராமின் உதவியாளராகத் தனது திரைப்படப் பயணத்தைத் தொடங்கினார். 2007-ஆம் ஆண்டு பாலாஜி சக்திவேலின் ‘கல்லூரி’ படம் மூலம் முழு ஒளிப்பதிவாளராக அறிமுகமான அவர், அதன் பிறகு தொடர்ச்சியாக கவனம் ஈர்க்கும் பணிகளைச் செய்தார்.
சீனு ராமசாமியின் ‘தென்மேற்கு பருவக்காற்று’, பாலாவின் ‘பரதேசி’, ராஜா முருகனின் ‘ஜோக்கர்’ உள்ளிட்ட படங்களில் அவரது ஒளிப்பதிவு வெகுவாகப் பாராட்டப்பட்டது. குறிப்பாக ‘பரதேசி’ படத்துக்காக BFI லண்டன் திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது உட்பட பல முக்கிய விருதுகளைப் பெற்றார்.
மேலும் தனது முதல் இயக்கப் படமான ‘டூலெட்’ (Tolet) மூலம் இயக்குநராக அறிமுகமான செழியன், இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, ஒளிப்பதிவு, தயாரிப்பு வடிவமைப்பு என பல பொறுப்புகளைத் தானே ஏற்று நிறைவேற்றினார். சென்னையில் வாடகை வீடு தேடும் நடுத்தர வர்க்கக் குடும்பத்தின் போராட்டத்தை யதார்த்தமாகச் சித்தரித்த இந்தப் படம், 2017-ஆம் ஆண்டுக்கான 65வது தேசிய விருதில் சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான விருதைப் பெற்றது. மேலும் 30க்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல விருதுகளை வென்று பாராட்டுகளைப் பெற்றது.
ஒளிப்பதிவாளராக மட்டுமல்லாமல், எழுத்தாளர், பாடலாசிரியர், இசை அறிஞர் என பன்முகத் திறமைகள் கொண்டவர் செழியன். ‘உலக சினிமா’ என்ற தொடர் நூல்களின் ஆசிரியரான அவர், மேலை இசை கோட்பாடுகள் குறித்த புத்தகங்களையும் எழுதியுள்ளார். சிறுகதைகளுக்காக கதா விருது உள்ளிட்ட இலக்கிய அங்கீகாரங்களையும் பெற்றவர்.
தமிழ்த் திரையுலகின் மூத்த இயக்குநர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட பலரும் செழியனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது இறுதி ஊர்வல ஏற்பாடுகள் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. திரையுலகில் யதார்த்த ஒளிப்பதிவு மற்றும் கதை சொல்லலில் தனி முத்திரை பதித்த செழியனின் மறைவு, தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பு. அவரது பங்களிப்புகள் திரையுலக வரலாற்றில் நிலைத்திருக்கும்.
