பொதுமக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசியின் தரத்தை கணிசமாக மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு முக்கிய புதிய நடைமுறையை அமல்படுத்தியுள்ளது. இந்திய உணவுக் கழகத்தின் (எஃப்சிஐ) மத்திய சேமிப்புக் கிடங்குகளில் தற்போது 122.64 மில்லியன் டன் உணவுத்தானியங்கள் கையிருப்பில் உள்ளன. இதில் 53.41 மில்லியன் டன் கோதுமை, 0.9 மில்லியன் டன் சிறுதானியங்கள் மற்றும் 68.34 மில்லியன் டன் அரிசி (42.84 மில்லியன் டன் நெல் உள்பட) அடங்கும். இந்த பெரும் கையிருப்பு, நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகள் வாயிலாக மக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், அரிசியில் உள்ள உடைந்த துகள்களின் (குருணை) அளவைக் குறைத்து தரத்தை உயர்த்த ‘ஆர்.எம்.டி’ (RMD) திட்டத்துக்கு மத்திய அமைச்சரவையின் பொருளாதார விவகாரக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, பச்சை அரிசியில் இதுவரை அனுமதிக்கப்பட்ட 25 சதவீத உடைந்த அரிசி இனி 10 சதவீதமாக மட்டுமே இருக்கும். புழுங்கல் அரிசியில் 16 சதவீதமாக இருந்த உடைந்த அரிசி 5 சதவீதமாகக் குறைக்கப்படும். இந்த மாற்றம் ரேஷன் கடைக்கு வரும் அரிசியின் தரத்தை பெரிதும் உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் திட்டம் ஆந்திரப் பிரதேசத்தில் சோதனை அடிப்படையில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. அங்கு அரிசி ஆலைகளில் நெல் அரைக்கும் போது கிடைக்கும் உடைந்த அரிசியை ஆலைகளிடமே விட்டுவிட்டு, அதற்கு பதிலாக அரசு சார்பில் ஊக்கத் தொகை வழங்கப்பட்டது. இந்த முறை நல்ல பலனைத் தந்ததால், தற்போது நாடு தழுவிய அளவில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 100 கிலோ நெல்லில் இருந்து கிடைக்கும் அரிசியில் முழு தானியங்களின் அளவு அதிகரிக்கும்.

பொதுமக்கள், குறிப்பாக ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் உயர்தர முழு அரிசியைப் பெறுவார்கள். உடைந்த அரிசி குறைவதால் சமையலில் சுவை, ஊட்டச்சத்து மற்றும் தோற்றம் அதிகரிக்கும். மேலும், இந்த நடவடிக்கை உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பெரும் பலம் சேர்க்கும் என்று மத்திய அரசு நம்புகிறது. இந்தப் புதிய விதிமுறைகள் விரைவில் அமலுக்கு வர உள்ள நிலையில், ரேஷன் அரிசியின் தரத்தில் எதிர்பார்க்கப்படும் மாற்றம் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெறும் எனக் கூறப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version