2026 ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் விறுவிறுப்பான காலிறுதி ஆட்டத்தில், மொராகோவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிரான்ஸ் மற்றும் மொராகோ அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க தீவிரமாக முயன்றன. இந்தநிலையில், ஆட்டத்தின் 28-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அதனை நட்சத்திர வீரர் கைலியன் எம்பாப்பே தவறவிட்டார். மொராகோ அணியின் கோல்கீப்பர் யாசின் போனோ அதனை சாதுரியமாகத் தடுத்தார். இதனால் முதல் பாதி 0-0 என சமனில் முடிந்தது.
போட்டியின் இரண்டாவது பாதியில் பிரான்ஸ் அணி ஆட்டத்தில் தீவிரமாக செயல்பட்டது. ஆட்டத்தின் 60-வது நிமிடத்தில் எம்பாப்பே ஒரு கோல் அடித்து தனது முந்தைய ஏமாற்றத்திற்குப் பதிலடி தந்து, அணிக்கு 1-0 என முன்னிலை பெற்றுத்தந்தார். அடுத்த சில நிமிடங்களிலேயே, அதாவது ஆட்டத்தின் 66-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணியின் மற்றொரு முக்கிய வீரரான உஸ்மானே டெம்பேலே தனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி 2-வது கோலை அடித்தார்.
இறுதிவரை மொராக்கோ அணியின் கோல் முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. இதன் மூலம் ஆட்ட நேர முடிவில் 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்ற பிரான்ஸ் அணி, தொடர்ந்து மூன்றாவது முறையாக உலகக்கோப்பைத் தொடரின் அரையிறுதிக்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது. ஸ்பெயின், பெல்ஜியம் மோதும் காலிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணியை, அரையிறுதியில் பிரான்ஸ் அணி எதிர்கொள்கிறது.
