பாலிவுட் சினிமாவின் முன்னனி நடிகராக வலம் வருபவர் அமீர்கான். நடிப்பு மட்டுமின்றி சில வருடங்களாக தயாரிப்பிலும் கவனம் செலுத்தி இவரது நடிப்பில் உருவாகியுள்ள சித்தாரே ஜமீன் பர் என்ற படம் வரும் 20-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கியுள்ள இந்த படத்தில், அமீர்கானுக்கு ஜோடியாக ஜெனிலியா நடித்துள்ளார். அத்தோடு லாகூர் 1947 என்ற படத்தை தயாரித்தும் வருகிறார். அதனை தொடர்ந்து தனது நீண்ட நாள் கனவான மகாபாரதத்தை படமாக எடுக்க வேண்டும் என்ற முனைப்பிலும் இருக்கிறாராம்.

சித்தாரே ஜமீன் பர் படத்தின் புரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், தனியார் செய்தி நிறுவனத்திற்கு அமீர்கான் பேட்டியளித்த போது, பஹல்காம் தாக்குதல் குறித்தும் பேசியிருந்தார். “ஏப்ரல் 22 அன்று நடந்த கொடூரமான பஹல்காம் தாக்குதல் கொடூரமானது. அவர்கள் நம் நாட்டிற்குள் நுழைந்து சாதாரண மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அவர்களின் கோழைத்தனத்தை மட்டுமே காட்டுகிறது. நீங்களோ நானோ கூட அங்கு இருந்திருக்கலாம். நான் சமூக ஊடகங்களில் இல்லை. ஆனால் மக்கள் உடனடியாக இந்த சம்பவத்துக்கு எதிர்வினையாற்றுகிறார்கள். இந்த தாக்குதல் நடந்தப் பிறகு நான் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றும்போது கூட, இந்த தாக்குதல் நம் நாட்டின் மீது மட்டுமல்ல, நமது ஒற்றுமையின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல். பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் போன்று ஏற்கெனவே நம்மிடமிருந்து பதிலடிகளை பெற்றிருக்கிறார்கள்’ எனக் குறிப்பிட்டு பேசினேன்.

ஒவ்வொரு இந்தியரையும் போலவே, என் இதயத்திலும் நிறைய கோபமும் வலியும் இருந்தது. எனது தேசபக்தி எனது படைப்புகளில் பிரதிபலிக்கிறது. ரங் தே பசந்தி, லகான், சர்பரோஷ் ஆகியவற்றைப் பாருங்கள். வேறு எந்த நடிகரும் என்னை விட அதிக தேசபக்தி படங்களை செய்ததாக நான் நினைக்கவில்லை. எந்த மதமும் மக்களைக் கொல்லச் சொல்லவில்லை. தாக்குதல் நடத்தியவர்கள் முஸ்லிம்களே இல்லை. பயங்கரவாதிகளை நான் முஸ்லிம்களாகக் கருதவில்லை. எந்த அப்பாவி மனிதனை, ஒரு பெண்ணையோ குழந்தையையோ போரில் கூட தாக்கக்கூடாது என்று இஸ்லாத்தில் எழுதப்பட்டுள்ளது. தீவிரவாதிகளின் செயல் மூலம் அவர்கள் மதத்திற்கு எதிராகச் செல்கிறார்கள்” என்றார்.

Share.
Leave A Reply

Exit mobile version