தலைமைச் செயலாளர், ஊரக வளர்ச்சித் துறை முதன்மை செயலாளர், தேனி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து தேனி நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் பவுளசியா பானு. இவர் பொம்மிநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு முறையாக கட்டணம் செலுத்தி, குடிநீர் இணைப்பு பெற்றிருந்தநிலையில், ஊராட்சி நிர்வாகத்தால் இவரது வீட்டில் இருந்த குடிநீர் இணைப்பு சட்டவிரோதமாக துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மீண்டும் குடிநீர் இணைப்பை வழங்கக்கோரி, மாவட்ட நிர்வாகத்திடம் அவர் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. இந்தநிலையில், இதுகுறித்து தேனி மாவட்ட நுகர்வோர் ஆணையத்தில் கடந்த 23.04.2024ல் பவுசியா பானு வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த தேனி நுகர்வோர் குறைதீர் ஆணையம் பவுசியா பானுவிற்கு குடிநீர் குழாய் இணைப்பை உடனடியாக ஏற்படுத்தித் தர வேண்டும், மன உளைச்சலுக்கு ரூ.50 ஆயிரம் அபராதமும், வழக்கு செலவுக்கு ரூ.10 ஆயிரமும் என மொத்தம் ரூ.60 ஆயிரத்தை செலுத்த வேண்டும் என்று 10.06.2025 அன்று தேனி நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை செயல்படுத்தாதநிலையில் பவுசியா பானு மீண்டும் தேனி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தை அணுகினார். இதனைத் தொடர்ந்து உத்தரவை நிறைவேற்றாததால், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர், ஊரக வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர், தேனி மாவட்ட ஆட்சியர், பெரியகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர், பொம்மிநாயக்கன்பட்டி ஊராட்சி செயலாளர், பொம்மிநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட 6 பேருக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் பிடிவாரண்டு பிறப்பித்து தேனி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
பொதுமக்களின் அடிப்படை வசதிகளில் ஒன்றான குடிநீர் குழாய் இணைப்பை சட்டவிரோதமாக துண்டித்துநிலையில் அதனை திரும்ப கேட்டு நீதிமன்றம் வரை பெண் ஒருவர் போராடியும் கூட குடிநீர் இணைப்பு வழங்காமல் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் முதல் அரசு முதன்மைச் செயலாளர், தேனி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ள சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
