மனிதர்களுக்கே மனிதர்கள் உதவி செய்ய யோசிக்கும் இந்தக் காலத்தில், ஐந்தறிவு ஜீவனான குருவியின் குஞ்சுகளுக்காக ஸ்கூட்டியை தியாகம் செய்தவரின் மனிதாபிமானம் நெஞ்சை நெகிழ வைத்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகத்தைச் சேர்ந்த கிறிஸ்டோபர் ஜெயகாந்தன் தான் குருவிக்காக தனது ஸ்கூட்டியை தியாகம் செய்துள்ளார்.
தனது வீட்டில் நிறுத்தி வைத்திருந்த ஸ்கூட்டியை சில நாட்களாக கிறிஸ்டோபன் பயன்படுத்தாத நிலையில், ஸ்கூட்டியின் முன் பகுதியில் உள்ள பெட்டியில் கூடு கட்டிய குருவி ஒன்று, அந்தக் கூட்டில் முட்டையும் இட்டுள்ளது.
இதனைக் கவனித்த கிறிஸ்டோபரும், அவரது மனைவி லிடிசியாவும், முட்டைகள் பொறிந்து குஞ்சுகள் பெரிதாகும்வரை ஸ்கூட்டியை எடுப்பதில்லை என முடிவு செய்துள்ளனர்.
தற்போது முட்டையிலிருந்து குஞ்சு பொரித்து, தாய்க்குருவி அவற்றுக்கு உணவூட்டும் நெகிழ்ச்சியான காட்சிகளைக் கண்டு கிறிஸ்டோபர் தம்பதி மகிழ்ந்துள்ளனர்.
பறவைகளின் மீதும், இயற்கையின் மீதும் அதிகம் பிரியம் கொண்டு, மனிதாபிமானத்தோடு செயல்பட்ட கிரிஸ்டோபர் ஜெயகாந்தன்-லிடிசியா தம்பதியினரை அந்தப் பகுதி மக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
