காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வல்லக்கோட்டை ஸ்ரீ சுப்பிரமணியசாமி திருக்கோயிலில், அமாவாசை மற்றும் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் மிக விமரிசையாக நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் இத்திருத்தலம், புகழ்பெற்ற ஒரு திருமணப் பரிகாரத் தலமாகும். இங்கு வைகாசி விசாகம், கந்த சஷ்டி, ஆடிக் கிருத்திகை போன்ற முருகனுக்கு உகந்த நாட்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.
திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு, உற்சவமூர்த்தி முருகப்பெருமான் மற்றும் வள்ளி, தெய்வானை தாயாருக்கு அதிகாலையிலேயே சிறப்பு வழிபாடுகள் தொடங்கின. பால், தயிர், இளநீர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட வாசனைத் திரவியங்களால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பின், மணமக்களான முருகப்பெருமானுக்கும் தாயாருக்கும் பச்சை மற்றும் சிகப்பு நிற பட்டு ஆடைகள் சாத்தப்பட்டு, வண்ண மலர் மாலைகளுடன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மங்கள வாத்தியங்கள் முழங்க, வேத மந்திரங்கள் ஓத கோயில் வளாகத்தில் திருக்கல்யாண வைபவம் விமர்சையாக நடைபெற்றது.
திருக்கல்யாணம் முடிந்தவுடன், மணக்கோலத்தில் காட்சியளித்த முருகப்பெருமான் வள்ளி-தெய்வானையுடன் கேடய வாகனத்தில் எழுந்தருளினார். மாட வீதிகளைச் சுற்றி வலம் வந்த சுவாமியை, திரண்டிருந்த பக்தர்கள் “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! வள்ளி மணாளனுக்கு அரோகரா!” என பக்தி முழக்கமிட்டு வணங்கினர்.
மூலவர் சுப்பிரமணியசாமிக்கும் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு விஸ்வரூப தரிசனத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். திருக்கல்யாணத்தைக் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரைத் தரிசித்து முருகனின் அருளைப் பெற்றுச் சென்றனர். இதற்கான ஏற்பாடுகளைக் கோயில் நிர்வாகத்தினர் மற்றும் அர்ச்சகர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர்.
