கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கிளைச் சிறையில் விசாரணைக் கைதியாக இருந்த மாற்றுத்திறனாளி சபரி வர்மன் (35) உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிறை தலைமை வார்டன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைக்குளம் அருகே ஏத்தங்காடு பகுதியைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி சபரி வர்மன் (35). தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்ததாகக் கூறி, ஜூலை 9-ம் தேதி தென்தாமரைக்குளம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். நீதிமன்ற உத்தரவின்படி, நாகர்கோவில் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவருக்கு, ஜூலை 13-ம் தேதி அதிகாலை திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து, இது காவல்துறையினரின் சித்திரவதையால் ஏற்பட்ட ‘கஸ்டோடியல் மரணம்’ (காவல் மரணம்) எனக் குற்றம்சாட்டி சபரி வர்மனின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சத்தியமூர்த்தி முன்னிலையில், சிறப்பு மருத்துவக் குழுவினர் நடத்திய ஆரம்பக்கட்ட உடற்கூறு ஆய்வில் சபரி வர்மனின் உடலில் கொடூரமான தாக்குதல்கள் நடத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

உடலின் பல்வேறு பகுதிகளில் மொத்தம் 19 காயங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த காயங்கள் அனைத்தும் மரணத்திற்குச் சற்று முன்பு ஏற்பட்டவை என மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். திசு ஆய்வு மற்றும் ரசாயன பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே முழுமையான மரணக் காரணம் அதிகாரப்பூர்வமாகத் தெரியவரும் என கூறப்படுகிறது.

இந்தநிலையில், நீதித்துறை விசாரணை மற்றும் உடற்கூறு ஆய்வு அறிக்கையின் முதற்கட்ட ஆதாரங்களின் அடிப்படையில், நாகர்கோவில் கிளைச் சிறையின் தலைமை வார்டன் ஜெகன், வார்டன்கள் சிவக்குமார் மற்றும் திருவுடை நம்பி (சுரேஷ்) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய பிற நபர்கள் குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மாற்றுத்திறனாளி ஒருவர் சிறையில் அடித்துக் கொல்லப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு மனித உரிமை அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்கி நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version