அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள நிலையில், வெள்ளம் வரக்கூடும் என்ற பீதியில் திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு கிராம மக்கள் உள்ளனர்.

வேப்பம்பட்டு கிராமத்தில் உள்ள ராமகிருஷ்ணாநகர், டன்லப் நகர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் ஆண்டுதோறும் மழைகாலத்தில் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. ராமகிருஷ்ணா நகரில் சுமார் 3 அடி உயரம் வெள்ளம் தேங்கும் நிலை உள்ளது. இதற்கு, மழைநீர் செல்லும் வழியில் சிலர் அடைப்புகளை ஏற்படுத்தி இருப்பதே காரணமாக கூறப்படுகிறது.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்களாக இருந்த ஆல்பி ஜான் வர்கீஸ், பிரபுசங்கர் ஆகியோர் வேப்பம்பட்டு கிராமத்திற்கு நேரிடையாக வந்து வெள்ள பாதிப்பை சரி செய்து வந்தனர். குறிப்பாக, ஆல்பி ஜான் பலமுறை நேரில் வந்து ராமகிருஷ்ணா நகரை பார்வையிட்டு சரி செய்து கொடுத்துள்ளார்.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதால், வேப்பம்பட்டு கிராம மக்கள், மீண்டும் வெள்ளம் வரக்கூடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். ஆதலால் புதிதாக வந்த மாவட்ட ஆட்சியர் பிரதாப் உடனடியாக நேரில் தலையிட்டு, சம்பந்தப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு வெள்ளம் நேரிடாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இப்பிரச்னைக்கு தற்காலிக தீர்வு காணப்படாமல், ரயில்வே தண்டவாளத்திற்கு கீழ் பகுதியில் இருந்து வரும் தண்ணீர் வெளியேறும் வகையில், வடிகால் ஏற்படுத்தி நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் ராமகிருஷ்ணா நகர், டன்லப் நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வேப்பம்பட்டு கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அதேபோல், மழையால் ராமகிருஷ்ணா நகரின் பல தெருக்களில் ஏற்கெனவே போடப்பட்ட சாலைகள் இருக்கும் இடமே தெரியாமல் சேதமடைந்து விட்டன. அதேபோல், சில தெருக்களில் மட்டுமே சிமெண்ட் சாலைகள் போடப்பட்டு, பிற தெருக்களில் சிமெண்ட் சாலைகள் போடப்படாமல் உள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் இடரை சந்தித்து வருகின்றனர்.

எனவே ராமகிருஷ்ணா நகரில் அனைத்து தெருக்களிலும் சீராக புதிதாக சிமெண்ட் சாலைகள் அமைத்து தரவும், சேதமடைந்த சாலைகளுக்கு பதில் புதிய சாலைகள் அமைத்து தர வேண்டுமெனவும் பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ கிருஷ்ணசாமி, மாவட்ட ஆட்சியர் பிரதாப் ஆகியோருக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version