விழுப்புரத்தில் ஓடும் ரயிலில் பெண்ணிடம் நகை, பணம் பறிப்பில் ஈடுபட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் புதுமனையை சேர்ந்தவர் சீதை. 60 வயதான அவர், அதே ஊரைச் சேர்ந்த 63 வயதான லட்சுமி என்பவரும் கடந்த 30-ம் தேதி இரவு கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் தாம்பரத்திற்கு சென்று கொண்டு இருந்தனர். அதே ரயிலில் ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலம் அருகே ஆனந்தபுரத்தை சேர்ந்த மோகித் என்ற 20 வயது இளைஞரும் பயணம் செய்தார்.
சீதை தனது பர்சில், 5 சவரன் நகை மற்றும் ரூ.13,000 பணமும் வைத்திருந்ததை, நோட்டமிட்ட மோகித் அதை திருட திட்டமிட்டுள்ளார். நள்ளிரவு 1.20மணியளவில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே ரயில் மெதுவாக சென்ற போது, மோகித் திடீரென சீதை வைத்திருந்த பர்சை பறித்துக் கொண்டு ஓடு ரயிலில் இருந்து குதித்துள்ளார்.
இதை எதிர்பாராத சீதை கூச்சலிட்டதோடு, ரயிலில் இருந்த அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினார். தொடர்ந்து சக பயணிகளுடன் இணைந்து மோகித்தை தேட, ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்த மோகித்தின் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு, ஓட முடியாமல் நின்று கொண்டிருந்தார். அவரை கையும், களவுமாக பயணிகள் பிடித்து, சீதையின் பர்சை அவரிடமே ஒப்படைத்தனர்.
தகவலறிந்து வந்த விக்கிரவாண்டி போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த மோகித்தை கைது செய்து சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.