சட்டமன்ற தேர்தலில் வரலாற்று வெற்றியாக தவெக 108 தொகுதிகளில் வென்று சரித்திரத்தில் இடம்பெற்றுள்ளது. ஆனால், பெரும்பான்மைக்கு தேவையான 118 தொகுதிகள் தவெகவுக்கு கிடைக்காததால் தொங்கு சட்டசபை உருவாகியுள்ளது. இருப்பினும், ஆட்சி அமைக்க அழைக்கக்கோரியும், பெரும்பான்மையை நிரூபிக்க அவகாசம் கேட்டும் தவெக சார்பில் ஆளுநருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இந்தநிலையில், கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், தவெக தலைவர் தளபதி மீது மக்கள் வைத்துள்ள அன்பும், ஆதரவும் தான் வெற்றிக்கு காரணம். ஒரு இயக்கம் வளர வேண்டும் என்றால் தியாகம் செய்ய வேண்டும். தியாகத்தின் அடிப்படையில் தான் ஒரு நிறுவனம் இருக்கும்.
பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்ஜிஆர், ஜெயலலிதா அம்மா ஆகியோர் தியாகத்தால் வளர்ந்த அதிமுக, தற்போது தடுமாறிக்கொண்டிருக்கிறது என்றார். எங்களை பொறுத்தவரை தான் என்று ஒருவர் நினைத்தால் தெய்வம் தான் என்று காட்டிவிடும். தெய்வத்தால் ஆகாதது ஒன்றுமில்லை. தெய்வத்தால் இன்று தளபதி ஆட்சி கட்டிலில் அமர இருக்கிறார். இது மக்கள் சக்தியாக மாறியுள்ளது.
இந்தியாவிலேயே முதல்முறையாக ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல், முதல் தேர்தலிலேயே மாபெரும் வெற்றி பெற்றுள்ளோம். இது சரித்திர வரலாறாக இருக்கும். மக்கள் அவரை வாழ்த்துகிறார்கள். மக்கள் அவரை நேசிக்கிறார்கள். உயிராக நேசிக்கும் மக்களுக்கு அவர் என்றும் உறுதுணையாக இருப்பார் என்றார்.
இதனை தொடர்ந்து பெரும்பான்மை இல்லையே, கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்பு இருக்கிறதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த செங்கோட்டையன், “Wait and See” என்ற ஒற்றை வரியில் சிரித்தப்படி பதிலளித்துவிட்டு சென்றார்.
