தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், வரும் மே 7-ம் தேதி (நாளை மறுநாள்) தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளதாகத் தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்று நடைபெற்ற அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் விஜய் ஒருமனதாகக் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், முறைப்படி ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார். இதனையடுத்து, பதவியேற்பு விழாவுக்கான  பணிகள் தலைநகர் சென்னையில் மிகத் தீவிரமாகத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பதவியேற்பு விழாவினைச் சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. வழக்கமாகத் தலைமைச் செயலகம் அல்லது ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பதவியேற்பு விழாக்களுக்கு மாற்றாக, பெரும் திரளான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் இந்த விழாவை நடத்த விஜய் விரும்புவதாகச் சொல்லப்படுகிறது. இதற்காக நேரு விளையாட்டு அரங்கில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் மேடை அமைக்கும் பணிகள் குறித்து உயர் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

நாளை ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் சென்னை திரும்பியதும், அவரைச் சந்தித்து விஜய் முறைப்படி தனது பெரும்பான்மை ஆதரவு குறித்த விவரங்களைச் சமர்ப்பிக்க உள்ளார். அதன் பிறகு ஆளுநர் மாளிகையிலிருந்து அதிகாரப்பூர்வமான பதவியேற்பு அழைப்பு வெளியாகும். 59 ஆண்டு கால திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்குப் பிறகு, ஒரு புதிய அரசியல் அத்தியாயம் நேரு உள் விளையாட்டு அரங்கில் அரங்கேறப் போவதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தவெக தொண்டர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version