தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் சேர வாய்ப்பு உள்ளதா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார்.

தேனியில் இருந்து சென்னை செல்வதற்காக, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திண்டுக்கல் ரயில் நிலையம் வருகை தந்தார். ரயில் நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், ”தவெக கூட்டம் உள் அரங்கில் நடத்தியது குறித்து கேட்கின்றீர்கள். இதை அக்கட்சி தலைவரிடம் தான் கேட்க வேண்டும். கூட்டத்தில் பேசிய விஜய் மக்களுக்கு வாக்குறுதிகள் கொடுத்ததாக கூறுகிறீர்கள். அவரது கனவு நனவாகட்டும்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “எஸ்ஐஆர் படிவம் பூர்த்தி செய்து கொடுப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை. இதில் விடுபட்டால் மேலும் ஒரு வாய்ப்பாக புதிய வாக்காளர்களை சேர்க்க வாய்ப்புள்ளது. படிவங்கள் பூர்த்தி செய்வதில் சிரமம் இருப்பது உண்மை தான். அதை இன்னும் எளிதாக்க வேண்டும். எஸ்ஐஆர் படிவம் பூர்த்தி செய்து கொடுக்கும் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்.

பீகாரில் எஸ்ஐஆர் தான் வெற்றிக்கு காரணம் என, திண்டுக்கல் சீனிவாசன் கூறியதாக சொல்கிறீர்கள். அண்ணன் சீனிவாசன் உண்மை தான் பேசுவார். உண்மையை தவிர எதையும் பேசவே மாட்டார். அதிமுக ஒன்றிணைந்தால் தான் வெற்றி பெற முடியும் என்பது தமிழக மக்களுடைய கருத்தாக உள்ளது” என்று கூறினார்.

அப்போது ”சீமான் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்கும்போது அவர்களை மிரட்டுகிறார்” என்ற கருத்துக்கு, ”பத்திரிகையாளர்கள் விமர்சனங்களுக்கு உள்ளாக்குவது தவிர்க்கப்பட வேண்டும். பத்திரிகையாளர்களுக்கு உரிய மரியாதை தரப்பட வேண்டும்” என்றார்.

அப்போது செய்தியாளர்கள் ‘மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதற்கு வாய்ப்பு உள்ளதா?’ என கேட்டதற்கு, “அரசியலில் எதுவும் நடக்கலாம். எங்கள் கொள்கையின்படி வாய்ப்பு தர வேண்டும். இணைப்பதற்கு அடிப்படை பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகிறது.

அதிமுக தொண்டர்களின் உரிமையை பாதுகாக்கிற குழுவாக செயல்பட்டு கொண்டிருக்கும் எங்களது கருத்து, தமிழ்நாட்டு மக்களின் கருத்து. அதிமுக இணைந்தால் தான் வெற்றி பெற முடியும். அண்ணாமலை, தினகரன் சந்திப்புக்கு வாழ்த்துகள். செங்கோட்டையன், தினகரன் உடன் சந்திப்பு நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது. தினந்தோறும் பேசிக்கொண்டு தான் இருக்கின்றோம். அனைவரும் ஒன்றிணைய வாய்ப்பு அதிகம்.

என்னுடைய ஆதரவாளர்கள் விலகுவது என்னை எந்த விதத்திலும் பாதிக்காது. ஒருபோதும் என்னை தனிமைப்படுத்துவது நடக்காது. தனிப்பட்ட முறையில் கூறுகிறேன். நாம் பிறக்கும் போது எந்த பதவியுடனும் பிறக்கவில்லை, இழப்பதற்கு” என தெரிவித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version