தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ராஜினாமா கடிதத்தைப் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு அனுப்பி வைத்தார். ஜனநாயக மரபுகளைப் பின்பற்றி அவர் அளித்த இந்த ராஜினாமா கடிதத்தை ஆளுநர் உடனடியாக ஏற்றுக்கொண்டார்.

இதுதொடர்பாக தமிழக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது அமைச்சரவையின் ராஜினாமா கடிதங்களை ஆளுநர் ஏற்றுக்கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியாகி, ஆட்சி மாற்றத்திற்கான சூழல் உருவாகியுள்ள நிலையில், இந்தச் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் வரை, அதாவது, புதிய அரசு அமையும் வரை முதல்வர் பதவியில் தொடர்ந்து நீடிக்குமாறு ஸ்டாலினுக்கு ஆளுநர் கேட்டுக்கொண்டுள்ளார்.

முன்னதாக, தேர்தலில் வெற்றி பெற்ற விஜய், ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறும் பெரும்பான்மையை நிரூபிக்க அவகாசம் கொடுக்குமாறும் ஆளுநருக்கு தவெக சார்பில் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இந்தநிலையில் கேரளாவிலும் புதிய ஆட்சி அமையும் சூழல் இருப்பதால் அந்த பணிகளையும் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் மேற்கொண்டுவருவதால் தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கான பணிகளில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version