தவெக வளர்ந்து வரும் கட்சியாக உள்ளதால், அதன் தலைமையில் 2026 தேர்தலில் மெகா கூட்டணி அமைந்தால் மிருக பலத்துடன் இருக்கும் திமுகவை வீழ்த்தி விடலாம் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் யோசனை தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்ட அமமுக சார்பில் தெற்கு தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கல்லூரி சாலையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், நிர்வாகிகளிடம் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
அதன் பின்னர், செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறுகையில், “தேர்தல் வாக்குறுதிகளாக திமுக அளித்த 90 சதவீத வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்து போயிருக்கிறது.
போதை பழக்கத்தால் கொலை, கொள்ளை போன்ற குற்றச்செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அப்படி இருந்தும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக 39 தொகுதிகளில் வெற்றி பெற்றதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உறுத்தலாகவே உள்ளது.
இப்போது திமுக அங்கம் வகிக்கும் இண்டியா கூட்டணியில் பிளவு ஏற்பட தொடங்கியுள்ளது. தவெகவும் பெரும் பாய்ச்சலோடு வந்துள்ளது. இவை எல்லாவற்றையும் யோசித்து பார்த்து திட்டம் தீட்டினால் மட்டுமே திமுகவை வீழ்த்த முடியும். இல்லையென்றால், திமுகவை சாய்ப்பது சிரமம்.
என்னை பொறுத்தவரை, தவெக தலைமையில் பெரிய கூட்டணி அமைந்தால் இண்டியா கூட்டணியை 3வது இடத்திற்கு தள்ளி விடலாம். திமுகவை வீழ்த்த நினைக்கும் கட்சிகள், தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மிருக பலத்துடன் திமுக இருக்கிறது என்ற உண்மையை உணர வேண்டும். சரியாக திட்டம் தீட்டி செயல்பட்டால் மட்டுமே திமுகவை நம்மால் வெற்றிக் கொள்ள முடியும்.
திமுக ஆட்சியில் பல்வேறு துறைகளில் ஊழல் மலிந்து கிடக்கிறது. முறைகேடுகள் நடக்கின்றன. நான்கரை ஆண்டுகால திமுக ஆட்சியில் எத்தனை பேருக்கு திமுக வேலை கொடுத்துள்ளது? திமுக ஆட்சியால் தமிழக மக்களுக்கு எந்த பயனும் இல்லை. வெறும் வெற்று விளம்பர ஆட்சியாகவே திமுக ஆட்சி உள்ளது.
அதனை எதிர்கட்சிகள் சரியான முறையில் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அதிமுகவில் ஒரு சிலரின் சுயநலத்தால் விழுதுகள் போன்ற பலரை நீக்கி விட்டார்கள். எங்களை துரோகிகள் என்கிறார்கள். இதனால் அதிமுகவில் 99 சதவீத தொண்டர்கள் மன வருத்தத்திலும், வேதனையிலும் உள்ளனர்.
இதுதான் சரியான தருணம். இப்போதும் சரியான முடிவு எடுக்காவிட்டால், தேர்தல் நமக்கு பாடம் கற்றுக்கொடுக்கும். செங்கோட்டையன் எங்களுடன் நட்பாக உள்ளார் அதற்காக எங்களுடன்தான் அவர் பயணிக்க வேண்டும் என்பதில்லை. அவர் விருப்பம் போல் தவெகவில் இணைந்துள்ளார்.
தவெக வளர்ந்து வரும் கட்சியாக உள்ளது. விஜயகாந்த் வருகை போல விஜய் வருகை ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அவருக்கு லட்சக்கணக்கான மக்களின் ஆதரவு இருக்கிறது. அதே சமயத்தில், அமமுகவும் தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்து வருகிறோம். விஜய் தலைமையில் நல்ல கூட்டணி அமைந்தால், ஆளும் திமுகவுக்கு கடும் சவாலாக இருக்கும்” என டிடிவி தினகரன் தெரிவித்தார்.
