தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கட்சியின் தலைவரான விஜய், ஒருமனதாகத் தவெக சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம், முறைப்படி முதலமைச்சர் பொறுப்பை ஏற்பதற்கான முதல் தடையை அவர் கடந்துள்ளார்.

சட்டமன்றக் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாளை ஆளுநரை சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நாளை சென்னை திரும்புவார் எனத் தெரிகிறது. ஆளுநர் சென்னை வந்தடைந்ததும் அவரை நேரில் சந்திப்பதற்கான நேரத்தை (Appointment) விஜய் தரப்பு கேட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாளை நடைபெறும் இந்தச் சந்திப்பின் போது, தவெக-வுக்கு ஆதரவு அளிக்கும் எம்.எல்.ஏக்களின் பட்டியல் மற்றும் ஆதரவுக் கடிதங்களை ஆளுநரிடம் விஜய் நேரடியாகச் சமர்ப்பித்து, புதிய முதலமைச்சராகப் பதவியேற்க உரிமை கோருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக பெரும்பான்மை இல்லாததால், தமிழகத்தில் புதிய ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மின்னஞ்சல் வாயிலாகக் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version