சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து அதிமுகவில் ஏற்பட்ட உள்கட்சி மோதல்கள் இன்னும் அடங்காமல் உள்ளன. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் திரண்ட எம்.எல்.ஏ.க்கள் பெரும்பாலும் பின்னர் மனம் மாறினாலும், கட்சியின் அடிமட்ட நிர்வாகிகள் மட்டத்தில் பதற்றம் தொடர்கிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் புதிய மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்ட பசுபதி தரப்பினருக்கும், சி.வி.சண்முகம் ஆதரவாளர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வரும் நிலையில், கடந்த 16-ம் தேதி சி.வி.சண்முகத்தின் 11 முக்கிய ஆதரவாளர்களின் கட்சிப் பதவிகளை எடப்பாடி பழனிசாமி பறித்தார். இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, திண்டிவனம் முன்னாள் எம்.எல்.ஏ. அர்ஜூனன் தலைமையில் மாநில, மாவட்ட மற்றும் ஒன்றிய நிலையிலான நிர்வாகிகள் உள்ளிட்ட 1,000-க்கும் மேற்பட்டோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர்.
இன்று காலை விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் திரண்ட இந்தப் பிரதிநிதிகள், ஐந்து வேன்கள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட கார்களில் சென்னை நோக்கிப் புறப்பட்டனர். அவர்கள் முதலில் மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெ. ஜெயலலிதா சமாதிகளுக்கு நேரில் சென்று தங்கள் முறையீட்டைப் பதிவு செய்யத் திட்டமிட்டுள்ளனர். பின்னர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சென்று தங்கள் ராஜினாமா கடிதங்களை ஒப்படைக்க உள்ளனர்.
இந்தப் பயணம் அதிமுகவில் மீண்டும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் ஒற்றுமைக்கு இது பெரும் சவாலாக அமையும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். சி.வி.சண்முகம் தரப்பினரின் இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கை, எடப்பாடி தலைமையை மீண்டும் அழுத்தத்துக்கு உள்ளாக்கியுள்ளது.
