100-ல் இருந்து 125 நாட்களாக உயர்த்தப்பட்ட வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் ஜூலை 1ம் தேதி முதல் அமலாக உள்ளநிலையில், அதற்கான முன்னேற்பாடு பணிகளை மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டுள்ளது.
மத்திய அரசின் 100 நாள் வேலைத் திட்டம் (மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்) மாற்றியமைக்கப்பட்டு, ‘விக்சித் பாரத் கிராம வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாத திட்டம்’ (VB-GRAMG) என்ற புதிய பெயரில் சட்டமாக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வேலை நாட்கள் 100-ல் இருந்து 125 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டம் ஜூலை 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரவுள்ளது. புதிய திட்டத்தை தங்குதடையின்றி செயல்படுத்துவதற்காக, மத்திய அரசு இடைக்கால நிதி ஒதுக்கீடாக ரூ.95,692 கோடி நிதியை ஏற்கனவே ஒதுக்கியுள்ளது. தற்போது ஜூன் 30-ம் தேதி வரை பழைய திட்டத்தின் கீழ் நடந்து வரும் பணிகள் அனைத்தும், எவ்விதப் பாதிப்பும் இன்றி புதிய கட்டமைப்புக்கு மாற்றப்படும் என்று ஊரக வளர்ச்சி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
திட்டம் நாடு முழுவதும் சீராகச் செயல்படுவதை உறுதி செய்ய மத்திய அரசு பல்வேறு நவீன யுக்திகளையும், தொழில்நுட்பங்களையும் புகுத்தி வருகிறது. இதற்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உதவவும், பணிகளை ஒருங்கிணைக்கவும் 100 சிறப்பு மண்டல அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் ‘முக அங்கீகார’ (Facial Recognition) அடிப்படையிலான வருகைப்பதிவு முறை மற்றும் ஊழியர்களுக்கான மின்-கேஒய்சி (e-KYC) செயல்முறைகள் கட்டாயமாக்கப்பட உள்ளன. டெல்லியில் இதுதொடர்பான உயர்மட்டப் பயிற்சி கூட்டங்கள் நடத்தப்பட்டு, அதிகாரிகளுக்கு டிஜிட்டல் தளங்களை இயக்குவது குறித்து விரிவான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.
புதிய சட்டத்தின்படி, கிராமப்புற மக்களுக்கு 125 நாட்கள் வேலை உறுதி செய்யப்படுவதுடன், விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் வேலை வழங்கப்படாவிட்டால் மாநில அரசுகள் கொடுப்பனவு (Allowance) வழங்க வேண்டும் என்ற விதியும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. ஜூலை 1 முதல் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வரவுள்ளதால், கிராமப்புறங்களில் இதற்கான தயாரிப்புப் பணிகள் தற்போது இறுதிச் கட்டத்தை எட்டியுள்ளன.
