திருச்சி அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ள 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
திருச்சி கல்மந்தை பகுதியை சேர்ந்த 14வயது சிறுமி ஒருவர், நேற்று (ஜூன் 3) மாலை திருநங்கையான தனது அக்காவை சந்திக்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, சம்பந்தப்பட்ட திருநங்கையை சிவகங்கைக்கு அழைத்துச் செல்வதற்காக மாரிசெல்வன் என்ற கார் ஓட்டுநர் அங்கு வந்துள்ளார். காரில் சிறிது தூரம் சென்று வரலாம் எனக்கூறி மாரிசெல்வன் சிறுமியை அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
பிறகு நீண்ட நேரம் கழித்து, சிறுமியை கீரைக்கடை பகுதியில் மாரிசெல்வன் இறக்கிவிட்டுள்ளார். சுயநினைவின்றி காயங்களுடன் இருந்த சிறுமியை மீட்ட அக்கம்பக்கத்தினர், அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மாரிசெல்வனை மடக்கிப்பிடித்த அங்கிருந்தவர்கள், தர்ம அடி கொடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், நடத்திய விசாரணையில், சிறுமிக்கு மாரிசெல்வன், குடிக்க தந்த குளிர்பானத்தை அருந்தியதும், சுயநினைவை இழந்த சிறுமிக்கு அவர் உள்பட மேலும் சிலர் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தகவலறிந்து மருத்துவமனையில் குவிந்த சிறுமியின் உறவினர்கள் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கிடைக்க வேண்டுமென்றும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் உறுதி அளித்ததையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.
