அண்மையில் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுகவில் உட்கட்சி ரீதியான களஆய்வுப் பணிகள் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. திமுக தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தேர்தல் கள நிலவரங்கள் மற்றும் வாக்குப்பதிவு தரவுகள் குறித்து தொகுதி வாரியாக நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில், வரும் 10-ஆம் தேதிக்குள் அனைத்துப் பகுதிகளிலும் முழுமையான களஆய்வை முடித்து, அதற்கான விரிவான அறிக்கையை கட்சித் தலைமையிடம் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என இந்த கூட்டத்தில் கறாரான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

களஆய்வின் போது பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கீழ்மட்ட மற்றும் நடுத்தர நிர்வாகிகள் தரப்பில், உள்ளூர் நிலவரங்கள் மற்றும் தேர்தல் பணிகள் குறித்து பல்வேறு புகார்களும், அதிருப்திகளும் தலைமையின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக, இந்த களஆய்வு அறிக்கை முழுமையாகப் பரிசீலிக்கப்பட்ட பிறகு, தேர்தல் பணிகளில் தொய்வாக இருந்த நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், திமுகவில் அடிமட்டம் முதல் மாநில நிர்வாகம் வரை பல்வேறு அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தவும் கட்சித் தலைமை திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பரபரப்பான இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, கட்சியின் துணைப் பொதுச்செயலாளர்கள் கனிமொழி கருணாநிதி, திருச்சி சிவா உள்ளிட்ட முக்கிய மூத்த நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version