தமிழ்நாடு அரசு காவல்துறையின் நிர்வாக திறனை மேம்படுத்தும் வகையில் 15 இந்தியக் காவல் சேவை (ஐபிஎஸ்) அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த மாற்றங்கள் பெருநகர சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களின் காவல் அமைப்புகளை பலப்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கட்டாய காத்திருப்பில் உள்ள அதிகாரிகளுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டதுடன், பதவி உயர்வு பெற்ற பல அதிகாரிகளும் முக்கிய பதவிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பெருநகர சென்னை காவல்துறையின் நலன் மற்றும் எஸ்டேட் ஆணையராகப் பணியாற்றிய கண்ணன், தாம்பரம் காவல் ஆணையரகத்தின் தலைமையகம் மற்றும் நிர்வாகப் பிரிவு துணை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல், தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு ஆணையரக துணை காவல் ஆணையராக இருந்த வேல்முருகன், காவல் படைத் தலைவர் அலுவலகத்தின் நவீனமயமாக்கல் பிரிவு உதவி காவல் தலைவராக பொறுப்பேற்கிறார். இவரது இடத்திற்கு கட்டாய காத்திருப்பில் இருந்த காவல் கண்காணிப்பாளர் ஜி. ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்டாய காத்திருப்பில் இருந்த டி. ரமேஷ் பாபு சென்னை பயங்கரவாத எதிர்ப்புப் படையின் காவல் கண்காணிப்பாளராகவும், கீதாஞ்சலி பெருநகர சென்னை காவல்துறையின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பிரிவின் துணை காவல் ஆணையராகவும், சுந்தரவடிவேல் பாதுகாப்புப் பிரிவு துணை காவல் ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நியமனங்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, பயங்கரவாத தடுப்பு போன்ற முக்கிய துறைகளுக்கு புதிய உத்வேகம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரை பயங்கரவாத எதிர்ப்புப் படை காவல் கண்காணிப்பாளர் ஆர். ரமேஷ் திருப்பூர் மாநகர வடக்கு மண்டல துணை காவல் ஆணையராகவும், தமிழ்நாடு கமாண்டோ படையின் காவல் கண்காணிப்பாளர் கே. மகேஸ்வரி ஆவடி காவல் ஆணையரகம் செங்குன்றம் வட்டார துணை காவல் ஆணையராகவும் பொறுப்பு ஏற்கின்றனர்.கோயம்பேடு வட்டார துணை காவல் ஆணையராக இருந்த ஆர். உதயகுமார் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது இடத்தை ராமநாதபுரம் மாவட்ட கீழக்கரை உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளராக இருந்த குணால் உத்தம் ஸ்ரோத் பதவி உயர்வுடன் ஏற்கிறார்.
ஏ.சி. கார்த்திகேயன் அடையார் வட்டார துணை காவல் ஆணையராக சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார்.ப தவி உயர்வு பெற்ற பல இளம் அதிகாரிகளும் முக்கிய பொறுப்புகளுக்கு உயர்த்தப்பட்டுள்ளனர். நாமக்கல் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ஆகாஷ் ஜோஷி திருப்பூர் மாநகர தெற்கு மண்டல துணை காவல் ஆணையராகவும், மதுரை திருமங்கலம் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் அன்ஷுல் நகர் திருநெல்வேலி மாநகர மேற்கு மண்டல துணை காவல் ஆணையராகவும், திருப்பூர் காங்கேயம் உட்கோட்ட அர்பிதா ராஜ்புத் சென்னை சி.பி.சி.ஐ.டி வடக்கு மண்டல காவல் கண்காணிப்பாளராகவும், திருச்சி திருவெறும்பூர் உட்கோட்ட பானவத் அரவிந்த் திருச்சி மாநகர வடக்கு மண்டல துணை காவல் ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மாற்றங்கள் காவல்துறையின் செயல்திறனை அதிகரிக்கவும், பல்வேறு மாவட்டங்கள் மற்றும் நகரங்களில் சீரான நிர்வாகத்தை உறுதி செய்யவும் உதவும் என்று காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
