திருவள்ளூரில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டு, தொழிலாளர்கள் பலர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருவதால், பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம் கன்னிகைப்பேர் கிராமத்தில் செயல்பட்டு வந்த கடல் உணவு பொருட்களை பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் தனியார் நிறுவனத்தில் கடந்த 21-ந்தேதி அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இந்த விபத்தில் அங்கு பணியாற்றி வந்த வடமாநில பெண் தொழிலாளர்கள் உள்பட 74 பேர் மயக்கமடைந்தனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு 2 அரசு மருத்துவமனைகள் மற்றும் 2 தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் சிகிச்சை பலனின்றி ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள் 11 பேர், அசாம் மாநிலத்தை சேர்ந்த 2 பேர் என 13 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 15 வயது சிறுமிகள் 2 பேரும் அடங்குவர்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பிரேத பரிசோதனை முடிந்து அவர்களது சொந்த மாநிலத்துக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 4 பெண்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்தது.
இந்நிலையில், ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒடிசாவைச் சேர்ந்த அலத்தி மகாராணா ஜுவாங்கா (19) பலியானார். இதனால் அமோனியா வாயு கசிவு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.

