சென்னையில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சப்ளை செய்ததாக 2 நடிகைகள் உட்பட 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை வடபழனி, சாலிகிராமம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் சினிமா பிரபலங்களுக்கு அதிகளவில் மெத்தம்பெட்டமைன் உள்ளிட்ட உயர் ரக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து போலீசார் மெத்தபெட்டமைன் பயன்படுத்திய நெசப்பாக்கம் ஓம் சக்தி நகர் 4வது தெருவை சேர்ந்த விக்னேஸ்வரன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் போதைப்பொருள் சப்ளையில் ஈடுபட்ட குன்றத்தூர் கோவூரைச் சேர்ந்த வெங்கடேஷ்குமார், கார்த்திக் ராஜா, காட்டுப்பாக்கத்தைச் யஷ்வந்த் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போதை பொருள் கடத்தி வந்த கார் மற்றும் 3 கிராம் மெத்தபெட்டமைன் 18 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பிறகு கைதான 4 பேர் அளித்த தகவலையடுத்து மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் நடராஜன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ஓஜி வகை கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் நடத்திய விசாரணையில் நடிகைகள் சிலர் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது.

பள்ளிக்கரணை கோவிலம்பாக்கத்தில் வீட்டை வாடகைக்கு எடுத்து போதைப்பொருள் விற்று வந்த கேரளா மாநிலம் பாலக்காட்டைச்சேர்ந்த விபின்ஷா என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ஒரு கிராம் மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. அதைதொடர்ந்து விபின்ஷா செல்போன் எண்ணை ஆய்வு செய்த போது வடபழனி கன்னியப்பன் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் சினிமா நடிகையான வின்சி நிவேதா என்பவரும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டது தெரிந்தது. அவரையும் போலீசார் கைது செய்தனர்.

உயர் ரக ஓஜி வகை கஞ்சா, மெத்தபெட்டமைன் கொடுத்ததற்கான ஆதராங்கள் சிக்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கைதான வின்சி நிவேதா வீட்டில் சோதனை நடத்திய போது, அவரது படுக்கை அறையில் இருந்து மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், கேரளாவை சேர்ந்த தனது தோழியான அஞ்சு கிருஷ்ணாவும் போதைப்பொருள் பயன்படுத்தி வந்ததும், சினிமா பிரபலங்களுக்கு மெத்தபெட்டமைன் போதைப்பொருளை விற்றதும் தெரியவந்தது.

சினிமா நடிகைகள், அவரது தோழி, ஆண் நண்பர்கள் உள்பட 8 பேரை கைது செய்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். நடிகை வின்சி செல்போனை போலீசார் சோதனை செய்த போது, அவரிடம் வழக்கமாக போதைப்பொருள் வாங்கிய சக சினிமா பிரபலங்கள், துணை நடிகைகள், சினிமா டான்சர்கள் என பலரது பெயரும் இடம்பெற்றுள்ளது.

வின்சி நிவேதா தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர். 2021ம் ஆண்டு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் சென்னை வந்தவர், சில குறும்படங்களில் நடித்துள்ளார். அவ்வாறு நடித்த குறும்படத்தின் இயக்குநர் மூலம் அவருக்கு போதைப் பொருள் பயன்படுத்தும் பழக்கம் ஏற்பட்டு, பின்னாளில் அதனை சப்ளையும் செய்து காசு பார்த்து வந்துள்ளார். 10-க்கும் மேற்பட்ட படங்களில் துணைநடிகையாக நடித்து வந்த வின்சி தனியார் நிறுவனங்களிலும் வேலை செய்து வந்துள்ளார். கைதான நடிகைகள் வின்சி, அஞ்சு கிருஷ்ணா உள்ளிட்ட 9 பேருக்கு வரும் 17-ம் தேதி வரை காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version