தமிழகத்தில் தொகுதி மறுவரையறை குறித்த கவலைகள் மீண்டும் தலைதூக்கியுள்ள நிலையில், முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று மாலை சென்னை கலைவாணர் அரங்கில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் புதிய தொகுதிகள் வரையறுக்கப்படும்போது, வட மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டின் மக்களவை இடங்கள் குறையக்கூடும் என்ற அச்சம் அரசியல் வட்டாரங்களில் பரவியுள்ளது.

இதனால் நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் குரல் பலவீனமடையும் என்றும், மாநில உரிமைகள் பாதிக்கப்படும் என்றும் பல்வேறு தரப்பினர் எச்சரித்து வருகின்றனர். கடந்த காலங்களில் திமுக ஆட்சியிலும் இதே பிரச்சினை எழுந்தபோது, அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து தமிழக நலனைப் பாதுகாக்க வலியுறுத்தியது நினைவுகூரத்தக்கது.

இந்தப் பின்னணியில் நடைபெறும் இன்றைய கூட்டத்தின் நோக்கம், மறுவரையறையால் மக்களவை மற்றும் மாநிலங்களவை தொகுதிகளுக்கு ஏற்படும் தாக்கங்களை விரிவாக விவாதிப்பதே ஆகும். நேற்று சட்டமன்றத்தில் தவெக அமைச்சர்கள், திமுக இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமா என கேள்வி எழுப்பியிருந்தனர். ஆனால் திமுக, அதிமுக, பாமக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் இதை புறக்கணித்துள்ளன.

திமுக எம்.பி. கனிமொழி அறிக்கையில், “தவெக அரசு நடத்தும் அரசியல் நாடகத்தில் திமுக பங்கேற்காது. எங்கள் முந்தைய நிலைப்பாட்டில் மாற்றமில்லை” என தெளிவுபடுத்தியுள்ளார். அதிமுகவும் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளது. பாமக விஜய் தலைமையிலான கூட்டத்தைப் புறக்கணிப்பதாகக் கூறியுள்ளது. தேமுதிக மேல்சபை எம்.பி. எல்.கே.சுதீஷ் டெல்லியில் இருப்பதாலும், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியூரில் இருப்பதாலும் கலந்துகொள்ளவில்லை.

இதற்கு மாறாக, காங்கிரஸ் கட்சியின் 12 எம்.பி.க்கள் (மேல்சபை உறுப்பினர்கள் உள்பட), விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இருவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இருவர், மார்க்சிஸ்ட் கட்சியின் இருவர், மதிமுகவின் துரை வைகோ மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.பி. உள்ளிட்ட தவெக ஆதரவுக் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். மொத்தம் சுமார் 20 எம்.பி.க்கள் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்யவுள்ளனர்.

தமிழகத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் சேர்த்து மொத்தம் 57 பேர் உள்ளனர். இவர்களில் பெரும்பான்மையானோர், குறிப்பாக திமுகவின் 28 எம்.பி.க்கள் (20 மக்களவை + 8 மேல்சபை) மற்றும் அதிமுகவின் 4 மேல்சபை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் புறக்கணித்துள்ளதால், கூட்டத்தின் பிரதிநிதித்துவம் குறைவாகவே இருக்கும் என அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன.

இருப்பினும், தவெக தரப்பு இந்தக் கூட்டம் மூலம் தமிழகத்தின் ஒருமித்த குரலை எழுப்ப முயற்சிப்பதாக வலியுறுத்துகிறது. தொகுதி மறுவரையறை தொடர்பான தேசிய அளவிலான விவாதங்களில் தமிழகத்தின் நிலைப்பாட்டை வலுப்படுத்தும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version