தமிழக-கேரள எல்லைப் பகுதியான குமுளி அருகில் உள்ள முல்லைப் பெரியாறு அணை, தமிழகத்தின் ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் இருபோக விவசாயத் தேவைகளுக்கும் முக்கிய ஆதாரமாக திகழ்கிறது.

வழக்கமாக ஜூன் 1ஆம் தேதி முதல் போக விவசாயத்திற்காக இந்த நீர்  தேக்கத்திலிருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை தாமதமாக தொடங்கியதால், அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நீர்வரத்து குறைந்து நீர்மட்டம் சரிந்தது. இதனால் விவசாயத்திற்குத் தண்ணீர் திறப்பதில் காலதாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில், கடந்த வாரம் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையால் அணையின் நீர்மட்டம் 122.30 அடியாக உயர்ந்தது. கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து, கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக ஆயக்கட்டுப் பகுதி விவசாயத்திற்கு வினாடிக்கு 200 கன அடியும், குடிநீர்த் தேவைக்காக வினாடிக்கு 150 கன அடியும் என மொத்தம் வினாடிக்கு 350 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அணையின் தலைமதகு பகுதியில் இருந்து தேனி மாவட்ட ஆட்சியர் வைத்தியநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெகநாத் மிஸ்ரா, மகாராஜன், சபரி ஐங்கரன் ஆகியோர் இணைந்து அடுத்த 120 நாட்களுக்குத் தேவையான நீரைத் திறந்து வைத்தனர்.

இதன் மூலம் இப்பகுதியில் உள்ள 14,707 ஏக்கர் நன்செய் நிலங்களில் முதல் போக நெல் சாகுபடிப் பணிகள் தடையின்றி நடைபெறும் என்பதால், தமிழக அரசுக்கு விவசாயிகள் தங்களது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version