நாடாளுமன்றத்தில் ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி. காமகோடியை விமர்சித்து பிரியங்கா காந்தி குறிப்பிட்டதாக கூறப்படும் கருத்துக்கு எதிராக, 215-க்கும் மேற்பட்ட துணைவேந்தர்கள், முன்னாள் துணைவேந்தர்கள் உள்ளிட்ட கல்வியாளர்கள் கடிதம் வெளியிட்டு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கருத்து ஒரு தனிநபரை மட்டுமல்ல, இந்தியாவின் அறிவியல் மற்றும் கல்வி நிறுவனங்களின் கண்ணியத்தையே பாதிக்கும் வகையில் இருப்பதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசின் தேர்வுச் சீர்திருத்த பணிக்குழு தொடர்பாக மக்களவையில் நடைபெற்ற விவாதத்தின் போது பேசிய காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, அக்குழுவில் இடம்பெற்றுள்ள ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி. காமகோடியை “கோமூத்திர நிபுணர்” என்று குறிப்பிட்டது இந்தியாவின் அறிவியல் நிறுவனங்களின் கண்ணியத்தை பாதிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கருத்து ஒரு தனிநபர் மீதான விமர்சனத்தைத் தாண்டி, கல்வியாளர்கள் நடத்தப்படும் விதம் மற்றும் இந்தியாவின் கல்வி நிறுவனங்களின் கண்ணியம் குறித்த விரிவான கவலைகளை எழுப்புவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பேராசிரியர் வி. காமகோடி ஐஐடி மெட்ராஸில் கணினி அறிவியல் மற்றும் பொறியியலில் எம்.எஸ்., முனைவர் பட்டம் பெற்றவர் என்றும், 150-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள், 50-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி திட்டங்கள், இந்தியாவின் முதல் தொழில்துறை தர மைக்ரோபிராசஸர் உருவாக்கத்தில் முக்கிய பங்கு உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை படைத்தவர் என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது கருத்துகளை ஆதாரங்களின் அடிப்படையில் விவாதிப்பதற்குப் பதிலாக இழிவுபடுத்தும் வகையில் விமர்சிப்பது அரசியலமைப்பு வலியுறுத்தும் அறிவியல் மனப்பான்மைக்கு எதிரானது என்றும் கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், அறிவியல் மனப்பான்மை என்பது புதிய கருத்துகளை கேலி செய்வதல்ல; ஆதாரங்களின் அடிப்படையில் அவற்றை ஆய்வு செய்வதே உண்மையான அணுகுமுறை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதுபோன்ற கருத்துகள் விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் பொதுவெளியில் தங்களது கருத்துகளை பகிர்வதைத் தயக்கப்படுத்தும் அபாயம் இருப்பதாகவும் எச்சரித்துள்ளனர்.
ஜனநாயகத்தில் கருத்து வேறுபாடு அவசியமானது; ஆனால் கேலியும் இழிவுபடுத்தலும் அறிவார்ந்த விவாதத்திற்கு மாற்றாக இருக்க முடியாது என்றும் கல்வியாளர்கள் அதில் மேலும் தெரிவித்துள்ளனர்.
