டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெறும் போராட்ட இடத்தைச் சுற்றிப் பொருத்தப்பட்டுள்ள முக அங்கீகார அமைப்பின் (FRS) மூலம், குற்றப் பின்னணி கொண்ட 2,500-க்கும் மேற்பட்ட நபர்களை அடையாளம் கண்டுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
போராட்ட இடத்தைச் சுற்றியுள்ள முக்கிய நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் நான்கு FRS கருவிகள் நிறுவப்பட்டு, அவை டெல்லி காவல் துறையின் தரவுத்தளத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. “இந்தத் தொழில்நுட்பம் இதுவரை குற்றப் பின்னணி கொண்ட 2,500-க்கும் மேற்பட்ட நபர்களை அடையாளம் காண உதவியுள்ளது. இது ஒரு வலுவான தடுப்பு நடவடிக்கையாகச் செயல்படுவதோடு, போராட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி சட்டம்-ஒழுங்குப் பிரச்சினைகளை உருவாக்க முயலும் நபர்கள் மீது தீவிரமாகக் கண்காணிக்கவும் உதவுகிறது” என்று காவல் துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.
மூத்த காவல் துறை அதிகாரி ஒருவரின் கூற்றுப்படி, தொலைவிலிருந்தும் முகப் படங்களைப் படம்பிடிக்கும் திறன் கொண்ட உயர்-தெளிவுத்திறன் (high-resolution) கொண்ட கேமராக்களை இந்த FRS அமைப்பு கொண்டுள்ளது. “ஒரு முகம் படம்பிடிக்கப்பட்டதும், அது சில நொடிகளுக்குள் டெல்லி காவல் துறையின் தரவுத்தளத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்படுகிறது. தேடப்படும் அல்லது தலைமறைவாக உள்ள குற்றவாளி கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட காவல் பிரிவு உடனடியாக எச்சரிக்கப்பட்டு, தாமதமின்றித் தேவையான சட்ட நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்படுகிறது” என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், போராட்டக் களத்தில் இந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதற்கு ‘சி.ஜே.பி அமைப்பு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. போராட்டக் களத்தை டிஜிட்டல் திறந்தவெளிச் சிறையாக மாற்றக்கூடாது என்றும், தனிநபர் உரிமையை மீறும் வகையில் பொதுமக்களை mass-scanning செய்வது அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் அந்த அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
