வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா மறைவை அடுத்து, 3 நாட்கள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும் என்று அந்நாட்டின் இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார்.

கலிதா ஜியாவின் மறைவை அடுத்து முகமது யூனுஸ், தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர், ‘‘இன்று நாட்டுக்கு மிகவும் துயரமான நாள். நாட்டின் ஜனநாயக அரசியலின் முன்னணி ஆளுமையாக விளங்கிய கலிதா ஜியா இன்று நம்மிடம் இல்லை. ஜனநாயகம், பல கட்சி அரசியல் கலாச்சாரம், மக்களின் உரிமைகளை நிலைநாட்டுவதற்கான போராட்டம் ஆகியவற்றில் அவரது அசாதாரண பங்கு வரலாற்றில் நிலைத்திருக்கும்.

தேசத்தின் இந்த கடினமான காலத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இந்த துக்க தருணத்தைப் பயன்படுத்தி யாரும் ஸ்திரமற்ற நிலையை உருவாக்கவோ, நாசகாரச் செயல்களில் ஈடுபடவோ அனுமதிக்காதபடி அனைவரும் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இந்த நேரத்தில் நாம் அனைவரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். 3 நாட்கள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும். அவரது இறுதிச் சடங்கு நடைபெறும் நாளைய தினம் (டிச. 31) பொது விடுமுறையாக அறிவிக்கிறேன்’’ என தெரிவித்துள்ளார்.

கலிதா ஜியா மறைவு: கலிதா ஜியா இன்று (டிச. 30) அதிகாலை காலமானார். நீண்டகாலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு டாக்காவிலுள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று காலை 6 மணியளவில் உயிரிழந்ததாக அவரது கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்தது.

வங்கதேசத்தின் முன்னாள் அதிபர் ஜியாவுர் ரஹ்மானின் மனைவியான கலிதா ஜியா, 1981-ல் தனது கணவர் படுகொலை செய்யப்பட்ட பிறகு அரசியலில் நுழைந்தார். 1984-ம் ஆண்டு முதல் பிஎன்பி கட்சியின் தலைவராகப் பொறுப்பு வகித்த அவர், 1991 முதல் 1996 வரையிலும், மீண்டும் 2001 முதல் 2006 வரையிலும் வங்கதேசத்தின் பிரதமராக பதவி வகித்தார்.

17 ஆண்டுகளாக லண்டனில் வாழ்ந்து வந்த அவரது மூத்த மகன் தாரிக் ரஹ்மான், சில நாட்களுக்கு முன்புதான் வங்கதேசம் திரும்பியிருந்தார். வங்கதேச அரசியலில் ஷேக் ஹசீனாவுக்குப் பெரும் சவாலாகத் திகழ்ந்த கலிதா ஜியாவின் மறைவு அந்நாட்டின் அரசியல் வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version