ஆட்சியர்கள் மற்றும் ஆணையர்கள் உள்ளிட்ட 30 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கல்லூரிக் கல்வி ஆணையராக இருந்த இ.சுந்தரவள்ளி, அரசு பொது மற்றும் மறுவாழ்வுத் துறையின் சிறப்புச் செயலராகவும், புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநராக இருந்த ஆர். லலிதா, நிதித் துறைச் செயலராகவும் (செலவினம்) நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரிய தலைமைச் செயல் அதிகாரி பூஜா குல்கர்னி, மதுவிலக்கு மற்றும் கலால் ஆணையராகவும், வி.அமுதவில்லி ஊரக வளர்ச்சித் துறையின் ஆணையராகவும் மாற்றப்பட்டுள்ளனர். ஊரக வளர்ச்சித் துறை ஆணையராக இருந்த பி.பொன்னையா, கல்லூரிக் கல்வி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு பசுமை ஆற்றல் கழக நிர்வாக இயக்குநர் டாக்டர் டி.ஜி. வினய், இந்து சமய அறநிலையத் துறையின் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்:
நாகை மாவட்ட ஆட்சியராக இருந்த பி.ஆகாஷ் மதுரை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரையில் இருந்த பிரவீன் குமார், நாகை மாவட்ட ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நிதித் துறையின் இணைச் செயலராக இருந்த பிரதிக் தயாள், திருச்சி மாவட்ட ஆட்சியராகவும், திருவள்ளூர் ஆட்சியராக இருந்த பிரதாப், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
தஞ்சை ஆட்சியர் பி.பிரியங்கா பேரூராட்சி இயக்குநராகவும், திருச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த வி.சரவணன், தருமபுரி மாவட்ட ஆட்சியராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தென்காசி மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்கள் நிதித் துறையின் இணைச் செயலர்களாகவும், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையின் துணைச் செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
