பெரம்பூர் தொகுதியை முதலமைச்சர் விஜய் வைத்துக்கொண்டதால் திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்நோக்கி இருக்கிறது.
சட்டசபைத் தேர்தல் முடிந்து புதிய ஆட்சி அமைந்த பின்னரும் தமிழக அரசியல் களம் அமைதியின்றி தொடர்கிறது. எதிர்பாராத தோல்வி திமுக மற்றும் அதிமுகவை பெரிதும் பாதித்துள்ளது. குறிப்பாக அதிமுகவில் தொடர் உட்கட்சி பூசல் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், கட்சி மீண்டும் ஒன்றிணைந்தாலும் உள்ளக மோதல்கள் தொடர்வதாகக் கூறப்படுகிறது. அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற நான்கு எம்.எல்.ஏ.க்கள் – மதுராந்தகம் தொகுதியைச் சேர்ந்த மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார், தாராபுரம் சத்யபாமா மற்றும் அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா – தங்களது பதவிகளை ராஜினாமா செய்து த.வெ.க.வில் இணைந்த சம்பவம் அ.தி.மு.க.வுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனால் கட்சித் தலைமை அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை. மேலும் சில எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க. பக்கம் திரும்பலாம் என்ற சந்தேகம் அ.தி.மு.க.வில் நிலவுகிறது. இந்தப் பலவீனத்தால் தி.மு.க. தன் கூட்டணி கட்சிகளை இழக்கும் நிலைக்கும், அ.தி.மு.க. தன்னையே இழக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி கிழக்கு, அம்பாசமுத்திரம், மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம் ஆகிய ஐந்து தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அறிவிப்பு எந்த நேரமும் வெளியாகலாம்.
திருச்சி கிழக்கு தொகுதி முதலமைச்சர் விஜய் போட்டியிட்டு வென்ற இடம். அவர் பெரம்பூர் தொகுதியைத் தக்க வைத்துக்கொண்டதால் இந்த இடைத்தேர்தல் அவசியமாகியுள்ளது. தற்போது 107 எம்.எல்.ஏ.க்களுடன் இருக்கும் த.வெ.க. இந்த ஐந்து தொகுதிகளிலும் வென்றால் எண்ணிக்கை 112 ஆக உயரும். விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் தடையற்ற ஆதரவுடன் ஐந்தாண்டு ஆட்சியை தக்கவைக்க முடியும் என்ற நம்பிக்கையில் த.வெ.க. தீவிரமாகக் களமிறங்கத் தயாராகி வருகிறது.
தி.மு.க.வும் இந்த இடைத்தேர்தலை முக்கியமாகக் கருதி, ஐந்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்துள்ளது. கட்சி நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து வலுவான வேட்பாளர்களைத் தேர்வு செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டுமே தன் வலிமையை நிரூபிக்க முடியும் என்று தி.மு.க. நம்புகிறது. அதிமுகவோ தொடர் தோல்வி மற்றும் உட்கட்சி பிரச்சினைகளால் பெரும் குழப்பத்தில் உள்ளது.
மீண்டும் தோல்வி ஏற்பட்டால் கட்சியில் புதிய பிளவு ஏற்படும் அச்சத்தில், தேர்தலைப் புறக்கணிக்கலாமா என தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. நாம் தமிழர் கட்சி மற்றும் பா.ஜ.க.வும் இடைத்தேர்தலை எதிர்கொள்வது குறித்து தங்கள் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன. விரைவில் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தமிழக அரசியல் களம் மீண்டும் பரபரப்படையத் தொடங்கியுள்ளது.
