நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்று வரும் ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படத்தைப் பாராட்டி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இன்ப அதிர்ச்சியளித்த இந்த அழைப்பு குறித்து நடிகர் விஷ்ணு விஷால் தனது எக்ஸ் (X) தளத்தில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
படத்தைப் பார்த்துவிட்டுப் பேசிய ரஜினிகாந்த், “செம்ம படம். ரொம்ப ஜாலியான என்டர்டெய்னர். இந்த மாதிரி படங்கள் எல்லாம் இப்போதெல்லாம் வருவதே இல்லை. விஷ்ணு, நீங்கள் மிகச் சிறப்பாக நடித்துள்ளீர்கள். ஐஸ்வர்யா லட்சுமியின் நடிப்பும் அருமை. குட்டி பாப்பா ஜாராவை எப்படிப் பிடித்தீர்கள்? அவர் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். விஷ்ணு, உங்களுக்கு மிகச் சிறந்த திரைக்கதை அறிவு (Script Sense) இருக்கிறது. இன்னும் நிறைய நல்ல படங்களை நீங்கள் கொடுக்க வேண்டும்” என்று மனதாரப் பாராட்டியுள்ளார்.
சூப்பர் ஸ்டாரின் இந்த பாராட்டு மழையால் நெகிழ்ந்துபோன விஷ்ணு விஷால், “ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் அவர்களிடமிருந்து ‘கட்டா குஸ்தி 2’ படத்தைப் பார்த்துவிட்டு வந்த இந்த அழைப்பு என்னை எல்லையற்ற மகிழ்ச்சியிலும் உற்சாகத்திலும் ஆழ்த்தியுள்ளது. இந்தத் திரைப்படப் பயணத்தின் மிகச் சிறந்த தருணம் ரஜினி சார் பேசியதுதான். அவரின் வார்த்தைகள் எனது அடுத்தடுத்த பயணத்திற்கு மிகப்பெரிய உந்துசக்தியாக இருக்கும். மிக்க நன்றி சார்!” எனப் பதிவிட்டுள்ளார்.
முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து வெளியான ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படத்திற்குத் தற்போது ரஜினிகாந்தின் பாராட்டும் கிடைத்துள்ளது படக்குழுவினரை இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
