கனடாவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பெரும்பாலான பொருட்கள் மீது 50 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவின் மதுபானங்கள், பால் பொருட்கள் மற்றும் வாகன ஏற்றுமதி ஆகியவற்றிற்கு எதிராகக் கனடா பாரபட்சமான நடவடிக்கைகளையும் கட்டுப்பாடுகளையும் விதித்து வருவதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையிலும், அமெரிக்க வர்த்தகத்தைப் பாதுகாக்கும் நோக்கிலும் இந்த 50 சதவீத கூடுதல் வரி விதிப்பு உத்தரவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளதாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த புதிய வரி விதிப்பின் கீழ் பால் பொருட்கள், மதுபானங்கள், சிமெண்ட், ஆடைகள், தளவாடங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அடங்கும். இருப்பினும், எரிசக்தி, உரம், மீன் வளம் மற்றும் முக்கிய தாதுக்கள் போன்ற சில அத்தியாவசியப் பொருட்களுக்கு இந்த வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

1930-ஆம் ஆண்டின் அமெரிக்க வர்த்தகச் சட்டப் பிரிவு 338-ன் கீழ் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வரி விதிப்பு ஆகஸ்ட் பாதியில் (30 நாட்கள் கழித்து) அமலுக்கு வரும் என்பதால், அதற்குள் இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை மூலம் சுமூகத் தீர்வு எட்டப்பட வாய்ப்புள்ளதாக வர்த்தக நிபுணர்கள் கருதுகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version