ஈரானில் ஹிஜாப் அணியாமல் பாடிய பாடகிக்கு 74 சவுக்கடி தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் 1979 இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு பெண்களுக்கு கடுமையான உடை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டன. பொது இடங்களில் பெண்கள் தனியாக பாடுவது தடை செய்யப்பட்டது. இந்தச் சட்டங்கள் இன்றும் கண்டிப்புடன் நடைமுறையில் உள்ளன. இந்நிலையில், இளம் பாடகி ஒருவர் தேசபக்தி பாடலை இசைக்குழுவினருடன் இணைந்து யூடியூப்பில் ஒளிபரப்பியதால் கடும் தண்டனைக்கு ஆளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
29 வயதான பரஸ்தூ அஹ்மதி, 2024 டிசம்பரில் தெஹ்ரான் அருகே உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கேரவன்சராய் இடத்தில் “அஸ் கூனே ஜவானானே வதன்” (தாயக இளைஞர்களின் இரத்தத்திலிருந்து) என்ற தேசபக்தி பாடலை நேரலை இசை நிகழ்ச்சியாக வழங்கினார். அவருடன் நான்கு இசைக்கலைஞர்கள் மற்றும் மொத்தம் எட்டு பேர் கொண்ட குழு பங்கேற்றது. அஹ்மதி ஹிஜாப் அணியாமல், தலை, கழுத்து, தோள்கள் தெரியும் உடையில் பாடிய இந்தக் காணொளி யூடியூப்பில் வெளியான பிறகு சுமார் 29 லட்சம் பார்வைகளைப் பெற்றது.
ஈரானிய அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியை “பொது ஒழுக்கத்துக்கு எதிரானது” என்றும், “ஆபாசமான உள்ளடக்கம்” என்றும் குற்றம்சாட்டினர். கோம் மாகாண குற்றவியல் நீதிமன்றம், பாடகியின் உடையைச் சுட்டிக்காட்டி கட்டாய ஹிஜாப் விதியை மீறியதாகக் கூறி தீர்ப்பளித்தது. பரஸ்தூ அஹ்மதிக்கு 74 சவுக்கடிகள், இரண்டு ஆண்டுகள் கலை நிகழ்ச்சிகளில் ஈடுபட தடை மற்றும் வெளிநாடு பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இசைக்குழு உறுப்பினர்களுக்கும் இதே தண்டனை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு மேல் முறையீடு செய்யக்கூடியது எனக் கூறப்படுகிறது.
இந்த உத்தரவுக்கு மனித உரிமை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட ஈரான் மனித உரிமைகள் மையத்தின் பிரசார இயக்குநர் பஹார் கந்தேஹரி, “பெண்கள் பாடுவது அல்லது இசை உருவாக்குவது ஈரான் சட்டப்படி குற்றமல்ல. இதை ஆபாச உள்ளடக்கமாக விளக்க முடியாது” என்று கண்டனம் தெரிவித்தார். நடிகர் செத்தாரே மலேகி, “பரஸ்தூவின் வீடியோ என்னுள் எதிர்ப்பு உணர்வைத் தூண்டியது. அவரைப் பெருமையுடன் நினைக்கிறேன்” என்று பகிர்ந்துகொண்டார்.
இந்தச் சம்பவம் ஈரானில் பெண்களின் உரிமைகள் மீதான தொடர் அடக்குமுறையை எடுத்துக்காட்டுகிறது. 2022 மஹ்ஸா அமினி போராட்டத்துக்குப் பிறகு ஹிஜாப் சட்டங்கள் இன்னும் கடுமையாக்கப்பட்டுள்ளன. பெண் கலைஞர்கள் சமூக ஊடகங்கள் வழியாக தங்கள் குரலை எழுப்ப முயலும் நிலையில், அதிகாரிகளின் இத்தகைய நடவடிக்கைகள் பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளன. இந்த வழக்கு ஈரானிய கலை உலகில் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
