எதிர்வரும் ஜூன் 19 ஆம் தேதி நடைபெற உள்ள மாநிலங்களவைத் தேர்தலில், ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியான மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூலை 24 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதில், திமுக சார்பில் வழக்கறிஞர் வில்சன், தொ.மு.ச. தலைவர் சண்முகம், எம்.எம்.அப்துல்லா மற்றும் திமுக கூட்டணி சார்பில் மதி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரின் பதவிக்காலங்கள் முடிவடைகின்றன. அதேபோல, அ.தி.மு.க.வைச் சேர்ந்த சந்திரசேகர், அ.தி.மு.க. ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் பதவிக்காலமும் முடிவுக்கு வருகிறது.
தேர்தல் அட்டவணை:
இந்தத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஜூன் 2 ஆம் தேதி தொடங்கி ஜூன் 9 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஜூன் 10 ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். தேவைப்பட்டால், தேர்தல் ஜூன் 19 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை அதே நாளில் மாலை 5 மணிக்குத் தொடங்கும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையின்படி, ஆளும் திமுக கூட்டணிக்கு 159 வாக்குகள் இருப்பதால், 4 இடங்கள் உறுதியாகக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக – மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள்:
இந்நிலையில், மாநிலங்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக வெளியிட்ட அறிவிப்பில், நான்கு இடங்களில் மூன்று இடங்களுக்கு திமுக வேட்பாளர்களும், மீதமுள்ள ஒரு இடம் ஏற்கெனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி மக்கள் நீதி மய்யத்திற்கு ஒதுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக வேட்பாளர்களாக பி. வில்சன், எஸ்.ஆர். சிவலிங்கம் மற்றும் கவிஞர் சல்மா ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
வேட்பாளர்கள் குறித்த விரிவான தகவல்கள்:
* சல்மா:
சல்மா என்கிற ரொக்கையா மாலிக், எளிமையான இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்தவர். திருச்சி மாவட்டம் பொன்னாம்பட்டி பேரூராட்சித் தலைவராகப் பணியாற்றிய சல்மா, 2006 இல் மருங்காபுரி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். தமிழ்நாடு சமூக நல வாரியத்தலைவராகப் பணியாற்றியுள்ளார். கவிதை, நாவல் என பல்வேறு தளங்களில் செயல்பட்டு வரும் சல்மாவின் படைப்புகள் அர்மீனியன் உள்ளிட்ட பல்வேறு உலக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. நீண்டகாலமாக திமுகவில் பணியாற்றி வருகிறார். (இஸ்லாமியர், பெண் பிரிவில் வாய்ப்பு)
* பி. வில்சன்:
மூத்த வழக்கறிஞரான இவர், இந்தியாவின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாகவும், தமிழ்நாடு மாநிலத்தின் கூடுதல் அட்வகேட் ஜெனரலாகவும் பணியாற்றிய அனுபவம் மிக்கவர். முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவிடத்தை மெரினாவில் அமைக்க சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2019 முதல் திமுகவின் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். (மூத்த வழக்கறிஞர், கிறிஸ்தவர் பிரிவில் வாய்ப்பு)
* எஸ்.ஆர். சிவலிங்கம்:
திமுகவின் நீண்டகால களப்பணியாளரான திரு. எஸ்.ஆர். சிவலிங்கம் அவர்கள் திமுகவின் சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளராக உள்ளார். எஸ்.ஆர். சிவலிங்கம் 1989 மற்றும் 1996 ஆம் ஆண்டுகளில் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார். இவர் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினராக போட்டியிடுவார் என்று முன்னர் கருதப்பட்டது. (நீண்டகால கட்சிப் பணியாளர்)
சமூக பிரதிநிதித்துவம்:
திமுகவின் வேட்பாளர் பட்டியல் கிறித்தவர் (வில்சன்), இஸ்லாமியர் (சல்மா), பெண் (சல்மா) என வெவ்வேறு சமூகப் பிரிவினருக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. கவிஞர்-எழுத்தாளர், மூத்த வழக்கறிஞர், நீண்டகால கட்சிக்காரர் என்ற வகையிலும் பட்டியல் கலந்து தயாரிக்கப்பட்டுள்ளது.