FIFA உலகக் கோப்பை 2026 கால்பந்து தொடரின் தனது தொடக்க ஆட்டத்தில் பிரேசில் அணி மொராக்கோவை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. நட்சத்திர வீரர் நெய்மர் உடல் தகுதி குறைவு காரணமாக இந்த ஆட்டத்தில் பங்கேற்காத நிலையில், ஐந்து முறை உலகக் கோப்பை வென்ற பிரேசில் அணியைப் பார்க்க சுமார் 80,663 ரசிகர்கள் மைதானத்தில் திரண்டிருந்தனர்.
ஆட்டத்தின் 21-வது நிமிடத்தில் மொராக்கோ வீரர் இஸ்மாயில் சபாயிரி, முதல் கோலை அடித்து தன் அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். ஆனால், இந்த மகிழ்ச்சி 11 நிமிடங்கள் மட்டுமே நீடித்தது. 32-வது நிமிடத்தில் பிரேசில் வீரர் வினி ஜூனியர் , கோல் அடித்து அணியைச் சமநிலைக்குக் கொண்டு வந்தார். முதல் பாதியின் முடிவில் 1-1 என இரு அணிகளும் சமமாக இருந்தன. இரண்டாம் பாதியில் வெற்றி பெற இரு அணிகளும் கடுமையாகப் போராடியும், கோல் எதுவும் விழாததால் ஆட்டம் டிராவில் முடிந்தது. இதன் மூலம் குரூப் சி பிரிவில் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. உலகக் கோப்பை வரலாற்றில் பிரேசில் அணிக்கு எதிராக மொராக்கோ கோல் அடித்தது இதுவே முதல் முறையாகும்.
இந்த டிரா முடிவின் மூலம், கடந்த 92 ஆண்டுகளாகத் தொடரும் ஒரு வரலாற்றுச் சாதனையை பிரேசில் அணி தக்கவைத்துள்ளது. அதாவது, 1934-ம் ஆண்டு உலகக் கோப்பை முதல், இன்று வரை தனது தொடக்க ஆட்டத்தில் பிரேசில் அணி தோல்வியைச் சந்தித்ததே இல்லை. இதற்கு முன்னதாக 1930-ம் ஆண்டு நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் யூகோஸ்லாவியாவிடம் 2-1 என்ற கணக்கில் பிரேசில் தோல்வியடைந்ததே அந்த அணியின் கடைசித் தொடக்க ஆட்டத் தோல்வியாகும்.
தொடர்ந்து தனது ஆதிக்கத்தைச் செலுத்தி வரும் பிரேசில் அணி, தனது அடுத்த குரூப் ஆட்டத்தில் வரும் ஜூன் 19-ம் தேதி ஹைட்டி அணியை எதிர்கொள்கிறது. அதைத்தொடர்ந்து ஜூன் 24-ம் தேதி ஸ்காட்லாந்து அணியுடன் மோத உள்ளது. 2002-ம் ஆண்டு ஜெர்மனியை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி உலகக் கோப்பையை வென்ற பிரேசில், இந்த முறையும் பட்டத்தைக் கைப்பற்றும் முனைப்புடன் களமிறங்கியுள்ளது.
