திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே விவசாயி ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் புகுந்த முகமூடி கொள்ளையர்கள் தம்பதியினரை கத்தி முனையில் மிரட்டி ரூ.45 ஆயிரம் ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராவணாபுரம் தோட்டத்துச் சாலையில் உள்ள வீட்டில் விவசாயி அருள்குமார் (47), அவரது மனைவி பிருந்தா (35) தனியாக வசித்து வருகின்றனர். அதிகாலை 2 மணியளவில் இவர்களது வீட்டு நாய் தொடர்ந்து குரைத்துள்ளது. சத்தம் கேட்டு அருள்குமார் வெளியே வந்தபோது, அங்கு மறைந்திருந்த முகமூடி அணிந்த 4 பேர் கொண்ட கும்பல் அவரைச் சுற்றி வளைத்தது.

கொள்ளையர்களில் இருவர் அருள்குமார் மற்றும் பிருந்தாவின் கழுத்தில் கத்தியை வைத்து, சத்தம் போட்டால் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர். அந்த நேரத்தில் மற்ற இருவர் வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த ரூ.45,000 ரொக்கப் பணத்தை கொள்ளையடிசத்துச் சென்றனர். போலீசாருக்குத் தகவல் கொடுத்துவிடக் கூடாது என்பதற்காக அருள்குமாரின் செல்போனைப் பறித்து உடைத்துச் சேதப்படுத்தினர். பின்னர், தம்பதியினரை வீட்டுக்குள்ளேயே பூட்டிவிட்டு கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பியோடினர்.

அதிகாலையில் தம்பதியினரின் கூச்சல் சத்தம் கேட்டு அவ்வழியாகச் சென்ற நபர் ஒருவர் கதவைத் திறந்து அவர்களை மீட்டார். கொள்ளை சம்பவம் குறித்து தகவலறிந்த தளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு முக்கிய தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

இப்பகுதியில் உள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்து, தலைமறைவான 4 பேர் கொண்ட முகமூடி கும்பலைத் தளி போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். தம்பதியை கத்தி முனையில் மிரட்டி நிகழ்ந்த கொள்ளை சம்பவம் உடுமலை மற்றும் சுற்றுவட்டார மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version