நடப்பு ஐபிஎல் தொடரின் குவாலிஃபையர் 2 சுற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ்  அணிக்கு எதிரான வாழ்வா சாவா போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் அதிரடி சதம் விளாசி புதிய உலக சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் ஐபிஎல் பிளே ஆஃப் வரலாற்றிலேயே பல்வேறு புதிய மைல்கற்களை அவர் எட்டியுள்ளார்.

ஐபிஎல் வரலாற்றில் இதுவரை நடைபெற்ற பிளே ஆஃப் சுற்றுப் போட்டிகளில் எந்தவொரு அணியின் கேப்டனும் சதம் அடித்ததில்லை. நேற்று நடைபெற்ற போட்டியில் பொறுப்புடன் ஆடிய ஷுப்மன் கில், இக்கட்டான சூழலில் சதம் அடித்து, “ஐபிஎல் பிளே ஆஃப் போட்டியில் சதம் அடித்த முதல் கேப்டன் என்ற வரலாற்றுச் சாதனையை தன்வசப்படுத்தியுள்ளார்.

ராஜஸ்தான் அணி நிர்ணயித்த 215 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களம் இறங்கிய குஜராத் அணிக்கு, ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய கில், வெறும் 47 பந்துகளில் சதமடித்து மிரட்டினார். இது ஐபிஎல் பிளே ஆஃப் வரலாற்றிலேயே “அதிவேகமாக அடிக்கப்பட்ட சதம்” என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இதற்கு முன் 2023-ல் மும்பை அணிக்கு எதிராக அவரே 49 பந்துகளில் அடித்ததே சாதனையாக இருந்தது; தற்போது அதை அவரே முறியடித்துள்ளார். மேலும், ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றில் இரண்டு சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையும் இவரையே சேரும்.

இந்த அதிரடி ஆட்டத்தின் மூலம் நடப்பு சீசனிலும் 700 ரன்களைக் கடந்துள்ளார் கில். இதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் இரண்டு வெவ்வேறு சீசன்களில் 700-க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்த கிறிஸ் கெயில், விராட் கோலி போன்ற ஜாம்பவான்கள் அடங்கிய எலைட் வீரர்கள் பட்டியலிலும் இணைந்துள்ளார். (முன்னதாக 2023 சீசனில் கில் 890 ரன்கள் குவித்திருந்தார்).

இப்போட்டியில் 52 பந்துகளில் 15 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 104 ரன்கள் குவித்து கில் ஆட்டமிழந்தார். இவருடன் இணைந்து மற்றொரு தொடக்க வீரரான சாய் சுதர்சனும் (58 ரன்கள்) அதிரடி காட்ட, குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான இந்த ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version