ஆளுங்கட்சியை கேள்வி கேட்கும் மக்கள், வீதியில் இறங்கி போராடக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தின் 17வது கூட்டத்தொடர் நாளை (ஜூன் 18) தொடங்குகிறது. இந்தநிலையில், சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், திமுகவின் கூட்டணிக் கட்சி ஆதரவுடன் தவெக ஆட்சி அமைந்திருப்பதாக குறிப்பிட்டார். வலுவான எதிர்க்கட்சியாக சிறப்பாக செயலாற்ற வேண்டும் என்று திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்திய அவர், ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் திமுகவினர் உதவி செய்ய ஓடி வருவார்கள் என்று மக்கள் கூற வேண்டும் என்றார். தற்போது ஆளுங்கட்சியை கேள்வி கேட்கும் மக்கள், வீதியில் இறங்கி போராடக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சினைகளுக்காக கடுமையாக உங்கள் வாதங்களை முன் வைக்க வேண்டும் என்று திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தினார். சட்டமன்றத்தில் ஜனநாயகத்தை காக்க வேண்டும் என்றும் புதியவர்கள் சீனியர்களை கேட்டு விதிமுறைகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். எதிர்க்கட்சி தலைவர் மற்றும் கொறடா ஆகியோரை அழைத்து சென்று மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் விதமாக கோரிக்கை மனுக்களை வழங்க வேண்டும் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.
